டெல்லி கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், தனது கைதை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பாக பதிலளிக்க தங்களுக்கு 3 வார கால அவகாசம் தேவை என கோரியுள்ளது அமலாக்கத்துறை.
டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து 28-ம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் விடப்பட்ட அவர், தனது கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு இன்று நீதிபதி ஸ்வரணா காந்தா ஷர்மா முன்பு விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜுவும், கேஜ்ரிவால் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியும் ஆஜராகினர்.
அப்போது, தனது கைது நடவடிக்கையை எதிர்த்து கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத் துறை சார்பில் வலுவான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், தனது கைது நடவடிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தும் கேஜ்ரிவால் மனு நகல் நேற்று தான் தங்களுக்கு கிடைத்ததாக தெரிவித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு, அதற்கு பதிலளிக்க கால அவகாசம் கோரினார்.
அமலாக்கத் துறை சார்பில் 3 வாரம் கால அவகாசம் கேட்கப்பட்டதாக நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அமலாக்கத் துறை கால அவகாசம் கோருவதானது கேஜ்ரிவால் விடுதலையை தாமதப்படுத்தும் தந்திரம் என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!
தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு... ஓபிஎஸ் வாக்குறுதி!
வெயிலுக்கு இதம் தரும் ஜில் தகவல்... தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2.80 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு... எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?