அமலாக்கத் துறை காவலில் உள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், அம்மாநில சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்குமாறு அமைச்சருக்கு மற்றொரு உத்தரவு பிறப்பித்துள்ளது மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத்துறை காவலில் இருந்துகொண்டு, டெல்லியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்குமாறு, கடந்த ஞாயிற்றுக்கிழமை, குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் அதிஷிக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
குற்ற வழக்கு விசாரணை காவல் வரம்பில் இருந்து கொண்டு கேஜ்ரிவால் உத்தரவு பிறப்பிக்க இயலுமா என்பது குறித்து விவாதங்கள் தொடங்கியுள்ளன. இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "கேஜ்ரிவால் உத்தரவு பிறப்பிப்பது, அவரது வழக்கில் நீதிமன்றம் அனுமதித்துள்ள சட்டவரம்புகளை மீறுவதாக உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையே டெல்லியில் எதிர்க்கட்சியாக உள்ள பாஜக, கேஜ்ரிவால் சிறையிலிருந்து கொண்டு அரசை நடத்துவதா என கேள்வி எழுப்பியதோடு, அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
கேஜ்ரிவால் பிறப்பித்த முதல் உத்தரவு தொடர்பான சர்ச்சை இன்னும் முடிவடையாத நிலையில், தற்போது, டெல்லி மக்களின் சுகாதார பிரச்சினைகளைத் தீர்க்குமாறு, அம்மாநில சுகாதார அமைச்சர் சவுரப் பரத்வாஜுக்கு கேஜ்ரிவால் மற்றொரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை இன்று சந்தித்த அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், "சிறையில் இருந்தபோதும், அவர் (அர்விந்த் கேஜ்ரிவால்) டெல்லி மக்களின் உடல்நலம் குறித்து கவலைப்படுகிறார். இது தொடர்பாக எனக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
டெல்லியில் உள்ள சில மருத்துவமனைகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளில் இலவசமாக மருந்துகள் வழங்கப்படவில்லை என்று அவர் தனது அறிவுறுத்தலில் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் சில மருத்துவமனைகளில் இலவச பரிசோதனைகள் நடத்தப்படவில்லை. எனவே, இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்குமாறு முதல்வர் எனக்கு அறிவுறுத்தியுள்ளார்.” என்றார்.