தேர்தல் பத்திரங்கள் ஊழல் விவகாரத்திலிருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக மத்திய பாஜக அரசு, அர்விந்த் கேஜ்ரிவாலை கைது செய்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
கேரள மாநிலம், கண்ணூரில், குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மூன்றாவது தொடர் பேரணி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், "பாஜக தலைமையிலான மத்திய அரசும், சங் பரிவார் அமைப்புகளும் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை புறக்கணித்து வருகின்றன. சங் பரிவார் அமைப்புகள், அரசியலமைப்பு தன்னாட்சி அமைப்புகளை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றன. அவை நாட்டின் நீதித்துறையை கூட அச்சுறுத்துகின்றன.
தேர்தல் பத்திர மோசடி தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தங்களுக்கு தீங்கு விளைவிப்பதாக மத்திய அரசு, பாஜக, சங் பரிவார் ஆகிய அனைவரும் நன்கு அறிவார்கள். இந்த விஷயத்திலிருந்து கவனத்தை திசை திருப்ப அவர்கள் விரும்பினர். அதற்காக அவர்கள் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை கைது செய்துள்ளனர்.
தேர்தல் பத்திர ஊழல் இந்தியாவில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஊழலாகும். இத்தகைய அப்பட்டமான ஊழலில் ஈடுபட அவர்களுக்கு (பாஜக) எப்படி தைரியம் கிடைத்தது? தாங்கள் ஒருபோதும் விசாரிக்கப்பட மாட்டோம் என அவர்கள் நினைத்தார்கள்.
கேஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம், சங்பரிவார் அமைப்புகள் தாங்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதையும், தங்கள் திட்டத்தை எப்படியும் நிறைவேற்றுவோம் என்பதையும் வெளிப்படுத்த முயற்சிக்கின்றனர்.
கடந்த 2019ல் சிஏஏ-வுக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இதில் சுமார் 53 பேர் கொல்லப்பட்டனர். பலர் காணாமல் போயினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
சங் பரிவாரால் திட்டமிடப்பட்ட வன்முறையில் ஏராளமான முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், நிறுவனங்கள் தாக்கப்பட்டன. அந்த சமயத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் வன்முறையை தூண்டும் கோஷங்களை எழுப்பினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் அவர் மீது வழக்கு தொடுத்தது” என்று பேசினார்.
இதையும் வாசிக்கலாமே...
#BREAKING : அஞ்சல் வழிக் கல்வி படிக்கலாமா, கூடாதா? பல்கலைக்கழக மானிய குழு விளக்கம்!