கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைதான டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், குடிநீர் பிரச்சினைகளை தீர்க்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது குறித்து விசாரித்து வருவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
2021-22ம் ஆண்டுக்கான டெல்லி அரசின் மதுபானக் கொள்கை வழக்கில் ஊழல் மற்றும் பணமோசடி தொடர்புடைய வழக்கில் அம்மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 21ம் தேதி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், மத்திய பாஜக அரசால் குறி வைக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கேஜ்ரிவாலை வரும் 28ம் தேதி வரை தங்கள் காவலில் வைத்து விசாரிக்க, அமலாக்கத் துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டாலும், அவரே முதல்வராக தொடர்வார் என்று டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி தலைவருமான அதிஷி ஏற்கெனவே தெரிவித்திருந்தார். ஆனால், சிறையில் இருந்து அரசாங்கத்தை நடத்துவதா என கேள்வி எழுப்பியுள்ள பாஜக, கேஜ்ரிவால் உடனடியாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையில் அமைச்சர் அதிஷி நேற்று கூறுகையில், டெல்லி நீர் துறை அமைச்சர் அதிஷி கூறுகையில், அமலாக்கத் துறை காவலில் இருந்துகொண்டே அரசை நடத்தும் முதல் உத்தரவை முதல்வர் கேஜ்ரிவால் பிறப்பித்துள்ளார். அதன்படி தேசிய தலைநகரின் சில பகுதிகளில் நீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க அவர் அறிவுறுத்தியுள்ளார் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமலாக்கத் துறை விசாரணை வளையத்தில் இருக்கும் கேஜ்ரிவால் அரசுக்கு உத்தரவு எதுவும் பிறப்பித்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை அலுவலகத்தில் இருந்து கணினியோ அல்லது காகிதமோ எதுவும் கொடுக்கப்படவில்லை.
கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால் கடந்த சனிக்கிழமை மாலை அமலாக்கத் துறை அலுவலகத்தில் அர்விந்த் கேஜ்ரிவாலை சந்தித்தார். அப்போது அரசு அதிகாரிகள் சிலரும் உடனிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, மனைவி கொண்டு சென்ற காகிதத்தின் மூலம் கேஜ்ரிவால் உத்தரவுகளை பிறப்பித்தாரா என்பது குறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.