[X] Close

ஒடிசா அருகே கரையைக் கடந்தது டிட்லி புயல்


cyclone-titli-hits-odisha-coast

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Oct, 2018 10:06 am
  • அ+ அ-

வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்லி புயல், கோபால்பூருக்கும் (ஒடிசா), கலிங்கப்பட்டினத்துக்கும் (ஆந்திரம்) இடையே இன்று (வியாழக்கிழமை) காலை கரையைக்கடந்தது. 

புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 140 முதல் 150 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. புயலின் தாக்கம் காரணமாக ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருகிறது.  

முன்னதாக  ஒடிஸாவின் கடலோர மாவட்டங்களான புரி, கேந்தரபரா, ஜகத்சிங்பூர், குர்டா, கஞ்சம் ஆகிய 5 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

மேலும், ஒடிசா, ஆந்திரம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு 1,000 தேசிய பேரிடர் மீட்புப் படையினரை மத்திய அரசு அனுப்பிவைத்துள்ளது. 

அடுத்த 3 அல்லது 4 மணி நேரத்துக்கு புயலின் தாக்கம் நிலவும் எனவும் பின்னர் அது அப்படியே மேற்குவங்கம் நோக்கி நகர்ந்து வலுவிழக்கும் எனவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

புயல் காரணமாக ஒடிசா மாநில அரசு இன்றும் நாளையும் விடுமுறை அறிவித்திருக்கிறது.

ரயில்கள், விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close