கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு, அம்மாநிலத்தில் மருத்துவர்கள் கடந்த 38 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு டாக்டர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் படுகொலை தொடர்பாக, காவல் துறையுடன் இணைந்து பணியாற்றி வந்த தன்னார்வலர் சஞ்சய் ராய் (33) என்பவரை காவல் துறை கைது செய்தது.
இந்தப் படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர் வலையை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ், காவல் துறை அதிகாரி அபிஜித் மண்டல் ஆகிய இருவரையும் சிபிஐ கைது செய்துள்ளது,
இதனிடையே இளநிலை மருத்துவர்கள் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி இடையிலான பேச்சுவார்த்தை முயற்சி 4 முறை தோல்வியில் முடிந்தது. இறுதி வாய்ப்பாக, கடந்த திங்கள் கிழமை பேச்சுவார்த்தைக்கு மம்தாபானர்ஜி அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து முதல்வரின் வீட்டுக்கு இளநிலை மருத்துவர்கள் சென்றனர்.
மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான சூழலைஏற்படுத்துதல், அதற்கான பிரதிநிதிகளை முறையாக தேர்வு செய்தல், பணிக்குழு அமைத்தல் என பல கோரிக்கைகளை இளநிலை மருத்துவர்கள் முன்வைத்தனர். கொல்கத்தா காவல் ஆணையர் வினித் கோயலையும் சுகாதாரத் துறை செயலர் என் எஸ் நிகமையும் நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். தற்போது காவல் ஆணையர் வினித் கோயல் நீக்கப்பட்டுள்ளார். ஆனால், சுகாதாரத் துறை செயலர் என் எஸ் நிகம் நீக்கப்படவில்லை.
இந்நிலையில் தங்கள் கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்படும்வரை போராட்டம் தொடரும் என்று இளநிலை மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். தங்கள் கோரிக்கை குறித்து விரிவாக பேச, மம்தா பானர்ஜியுடன் மீண்டும்சந்திப்பை ஏற்பாடு செய்ய தலைமை செயலர் மனோஜ் பாண்டுக்கு இளநிலை மருத்துவர்கள் மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.
மகள் உயிரோடு இருந்திருப்பாள்: உயிரிழந்த பெண் மருத்துவரின் தந்தை செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2021-ம் ஆண்டிலேயே ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி முதல்வரான சந்தீப் கோஷ் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் தெரி விக்கப்பட்டன. அப்போதே அவர் மீது மேற்கு வங்க முதல்வர் மம்தா கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இன்று என் மகள்உயிருடன் என்னோடு இருந்திருப்பாள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்