புதுடெல்லி: டெல்லி முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை இன்னும் ஒரு வாரத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் காலி செய்வார் என்று ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி சஞ்சய் சிங் தெரிவித்தார்.
டெல்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் இன்னும் ஒரு வாரத்தில் தனது அதிகாரபூர்வ இல்லத்தை காலி செய்வார் என்றும், அனைத்து அரசு சலுகைகளையும் கைவிடுவார் என்றும் அக்கட்சியின் எம்.பி சஞ்சய் சிங் தெரிவித்தார்.
மேலும், “கேஜ்ரிவால் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறிய பிறகு, அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் டெல்லியில் தங்குவார்கள். அவர்களுக்கு பொருத்தமான தங்குமிடத்திற்கான தேடல் நடந்து வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் தனது பங்களாவை இன்னும் ஒரு வாரத்தில் காலி செய்வார். அவரது பாதுகாப்பு குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். தற்போது இருக்கும் வீடு பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் முக்கியமானது, ஆனால் அவர் அதைக் காலி செய்ய முடிவு செய்துள்ளார். இனி அவர் டெல்லி மக்களுடன் வாழ்வார்” என்று தெரிவித்துள்ளார்
கேஜ்ரிவால் மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் பாதுகாப்பின் கீழ் உள்ளார். மேலும், அவர் புதிய வீட்டிற்குச் செல்வதற்கு முன் மத்திய நிறுவனங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும்.