சந்திரயான்-3 விண்கலத்தில் அனுப்பப்பட்ட ரோவர் நிலவில் ஆய்வுப் பணிகளை தொடங்கியது.
நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் நிலவில் தரையிறங்கியது. ஆய்வுக்காக 26 கிலோ எடையுள்ள பிரக்ஞான் எனற ரோவர் சாதனத்தை உருவாக்கி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு லேண்டருக்குள் இருந்து சாய்வு தள பாதை மூலம் ரோவர் வெளியேறியது. 6 சக்கரங்களுடன் கூடிய ரோவர் சாதனம் வெளியில் வந்ததும், சிறிது தூரம் தானாக இயங்கியது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் இந்தியா தனது கருவி மூலம் நடைபயணத்தை தொடங்கி விட்டது.
இன்று காலை ரோவர் சாதனம் தானாக இயங்கி மேலும் சில மீட்டர் நகர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. ரோவர் சாதனத்தில் 2 அதிநவீன கருவிகள் இருக்கின்றன. இந்த கருவிகள் மூலம் நிலவின் மேற்பரப்பில் உள்ள ரசாயன சேர்க்கைகள் ஆய்வு செய்யப்படும். நிலவின் தென் துருவத்தில் தண்ணீர் எந்த அளவு உள்ளது என்பதையும் இந்த கருவி அளவிட்டு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தெரிவிக்கும். ரோவரில் லிப்ஸ் என்ற கருவியும் இருக்கிறது. இது நிலவில் மெக்னீசியம், அலுமினியம், இரும்பு, சிலிகான், பொட்டாசியம், கால்சியம், டைட்டானியம், லித்தியம், ஹைட்ரஜன் போன்ற கனிமங்கள் எந்த அளவுக்கு இருக்கின்றன என்பதை ஆய்வு செய்து தகவல் தெரிவிக்கும்.மேலும், ஹைட்ரஜன் தயாரிக்கவும், நிலவில் ஆக்சிஜன் உருவாக்கவும், நிலவில் சுரங்கப் பணிகள், செவ்வாய் கிரகத்திற்கான பயணம் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த தென் துருவ ஆய்வு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
இதற்கிடையே வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டுள்ள லேண்டர் சாதனமும் தன்னிச்சையாக சில ஆய்வுகளை மேற்கொள்ளும். இதற்காக லேண்டரில் 5 நவீன கருவிகள் இணைக்கப்பட்டு உள்ளன. நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்ப மாறுபாடுகள், மேடு, பள்ளங்கள், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக போன்றவை குறித்து லேண்டர் ஆய்வு செய்யும். விண்வெளி ஆய்வில் புதிய சகாப்தத்தை இந்தியாவின் லேண்டரும், ரோவரும் உருவாக்க உள்ளன.