குடையோட கிளம்புங்க... இந்த 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!


மழை நிலவரம்

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக மழை நீர் ஆங்காங்கே தேங்கி பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக புறநகர் பகுதிகளான மணப்பாக்கம், தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளை மழை நீர் சூழ்ந்து குளம் போல் காட்சி அளிக்கிறது.

சுரங்கபாதையில் தேங்கியுள்ள மழை நீர்

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘’தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்’’ என தெரிவித்துள்ளது.

x