விமான பயணத்தில் சிறுமி மீது கொட்டிய ஹாட் சாக்லேட்... கொதிக்கும் பெற்றோர்; கூல் விமான நிறுவனம்


விமானத்தில் பயணிகள்

விமானப் பயணத்தின் ஊடே, ஹாட் சாக்லேட் பானம் சிறுமி ஒருவர் மீது கொட்டியதில், அவரது பெற்றோர் மற்றும் விமான நிறுவனத்துக்கு இடையே வார்த்தைப் போர் வலுத்துள்ளது.

இந்தியாவின் டெல்லியிலிருந்து ஜெர்மனியின் பிராங்பர்ட் நோக்கி அண்மையில் இந்தியாவின் விஸ்தாரா விமானம் கிளம்பியது. பயணத்தின் இடையே 10 வயது சிறுமி ஒருவர் மீது ஹாட் சாக்லேட் பானத்தை விமானப் பணிப்பெண் கொட்டியதாக பெரும் பிரச்சினை எழுந்தது. விமானம் தரையிறங்கிய பிறகும், சிறுமியின் பெற்றோர் - விமான நிறுவனம் இடையே பெரும் வார்த்தைப் போராக இந்த விவகாரம் வெடித்துள்ளது.

தாரா என்னும் 10 வயது சிறுமி தனது பெற்றோருடன் பிராங்க்பர்ட் நோக்கிய விஸ்தாரா விமானத்தில் பயணித்தார். ஆகாயத்தில் விமானம் பறக்கும் போது தனக்கு மிகவும் பிடித்தமான ஹாட் சாக்லேட்டை தாரா கோரினார். கொதிக்கும் சூட்டிலான அந்த பான உணவை விமானப் பணிப்பெண் பரிமாறும் போது சிறுமியின் உடலில் தவறுதலாக கொட்டியதில், தோல் வேகுமளவுக்கு காயம் உருவானது.

விஸ்தாரா விமானம்

உடனடியாக விமானத்தில் முதலுதவியும் பின்னர் தரையிறங்கிய பிறகு மருத்துவ சிகிச்சையும் தாராவுக்கு வழங்கப்பட்டது. இதனை அடுத்து, இந்தியாவின் டாடா சன்ஸ் குழுமத்தின் விஸ்தாரா விமான நிறுவனத்துக்கு எதிராக, தாராவின் பெற்றோர் குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.

விமானப் பணிப்பெண்ணின் பொறுப்பின்மை மற்றும் அலட்சியம் காரணமாக இந்த அசம்பாவிதம் நடந்திருப்பதாகவும், விமானப் பணிப்பெண்ணோ விமான நிறுவனம் சார்பிலோ இதனையொட்டி வருத்தம் தெரிவிக்கவில்லை எனவும் வாதிட்டனர்.

இதற்கு பதிலளித்திருக்கும் விஸ்தாரா நிறுவனம், நடந்த அசம்பாவிதத்துக்கு சிறுமியின் விளையாட்டுத்தனமே காரணம் என விளக்கியதோடு, தாராவின் மருத்துவ செலவுகளுக்கு பொறுப்பேற்பதாகவும் அறிவித்துள்ளது. ஆனபோதும், விஸ்தாரா விமானத்தில் நிகழ்ந்த இந்த விவகாரத்தை முன்வைத்து இருதரப்பிலான சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன.

x