குட் நியூஸ்... ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு வட்டியை உயர்த்திய வங்கிகள்!


மூத்த குடிமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை பல முன்னணி வங்கிகள் உயர்த்தியுள்ளது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆக்சிஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 14 முதல், மூத்த குடிமக்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 3.5% முதல் 8.05% வரை வட்டியை வழங்குகிறது. பொது வாடிக்கையாளர்களுக்கு, 3.5% முதல் 7.3% வட்டியை வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் ரூ. 2 கோடிக்கு குறைவான கால டெபாசிட்டுகளுக்கு பொருந்தும்.

அதேபோல மற்றொரு முன்னணி வங்கியான பெடரல் வங்கியும் நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. 2023 ம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி, 15 ஆகஸ்ட் 2023 முதல் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்துவதாக அந்த வங்கி அறிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட காலகட்டங்களுக்கு மூத்த குடிமக்களுக்கான நிலையான விகிதத்தை விட 77 அடிப்படை புள்ளிகளை வங்கி இப்போது கூடுதலாக வழங்குகிறது.

கனரா வங்கியும் தன் பங்குக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. ஆகஸ்ட் 12 முதல், கனரா வங்கி மூத்த குடிமக்களுக்கு 4% முதல் 7.75% FD வட்டியை வழங்குகிறது. பொது வாடிக்கையாளர்களுக்கு 4% முதல் 7.25% வட்டியை அவ்வங்கி வழங்குகிறது.

அதே போல எஸ்.எஸ்.எப்.பியும் ஆகஸ்ட் 7 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், அதன் 5 ஆண்டு காலத்திற்கான நிலையான வைப்பு விகிதங்களை 85 அடிப்படை புள்ளிகள் (0.85%) அதிகரித்துள்ளது. அது இப்போது பொது மக்களுக்கு 4.00% முதல் 8.60% வட்டி விகிதத்தில் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளை அனுமதிக்கிறது. மூத்த குடிமக்களுக்கு, சிறு நிதி வங்கி 4.50% முதல் 9.10% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

பல்வேறு வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதால் மேலும் பல முன்னணி வங்கிகளும் விரைவில் வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது

x