திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வரும் நிலையில், இதற்காக, மாவட்ட நிர்வாகம், வருவாய், ஊரக வளர்ச்சி, பொதுப்பணி, நெடுஞ்சாலை, நகராட்சி மற்றும் பேரூராட்சி தீயணைப்பு மற்றும் மீட்பு, சுகாதார துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்கும் படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதலே கனமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது.
அந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் மிக அதிகமாக பாதிப்பு ஏற்படும் பகுதி -8, அதிகம் பாதிப்பு ஏற்படும் பகுதி- 39; மிதமாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதி -44 மற்றும் குறைவாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதி- 42 என, மொத்தம் 133 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது.
அப்பகுதிகளில், மீட்பு நடவடிக்கைக்காக, 42 மண்டல குழு, 22 கூடுதல் குழு என, 64 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பேரிடர் ஏற்பட்டால், முன்கூட்டி தகவல் அளிக்க 9 பேர் கொண்ட ஒரு குழு, தலா 12 பேர் கொண்ட 6 தேடுதல் மற்றும் மீட்பு குழு, பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ளோரை வெளியேற்ற, 31 பேர் கொண்ட 3 குழு மற்றும் 27 பேர் கொண்ட தற்காலிக தங்கும் முகாம் குழு -3 அமைக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைப்பதற்கு வைரவன்குப்பம், காட்டுப்பள்ளி புயல் பாதுகாப்பு மையங்கள், திருப்பாலைவனம், ஆண்டார்மடம், பள்ளிப்பாளையம், எளாவூர் -1 மற்றும் மெதிப்பாளையம் ஆகிய ஐந்து இடங்களில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளன. மேலும், 660 தற்காலிக தங்குமிடங்களும் தயார் நிலையில் உள்ளன.
வெள்ளத்தில் சிக்குவோரை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினரின் பணி மிகவும் உதவியாக உள்ளது. இதற்காக, திருவள்ளூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
மாவட்டத்தில் பொதுமக்கள் பெருமழை தொடர்பாக தங்கள் புகார்களை தெரிவிக்க மாவட்ட பேரிடர் தடுப்பு கட்டுப்பாட்டு அறைக்கான கட்டணமில்லா தொலைபேசி எண்.1077: 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. கட்டுப்பாட்டு அறை 044- 27664177, 044- 276 66746, வாட்ஸ்அப் எண். 94443 17862 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
உத்தராகண்ட் சுரங்க விபத்து; 41 தொழிலாளர்களின் நிலை என்ன? வெளியானது வீடியோ