'முஸ்லிம் வியாபாரிகளிடம் பொருட்கள் வாங்காதீர்கள்'... சர்ச்சை போஸ்டரால் பரபரப்பு!


காஜியாபாத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி

காஜியாபாத்தில் முஸ்லிம் வர்த்தகர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நான்கு பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபாத் மாவட்டத்தில் முஸ்லிம் வியாபாரிகளிடமிருந்து பொருட்கள் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. காஜியாபாத்தில் உள்ள நந்த்கிராம் காவல் நிலையத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், விரைந்து வந்து அங்கு ஒட்டப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய போஸ்டர்களை கிழித்தனர். அத்துடன் சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் யார் என்பது குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். அப்போது நிதின் சவுகான், அவரது சகோதரர் சாகர் சவுகான். சேகர் பண்டிட், பிரம்மானந்தன் ஆகிய நான்கு பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அவர்கள் மீது பிரிவுகள் 147 (கலவரம் தொடர்பானது), 153ஏ (மதம், இனம் ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே விரோதத்தைத் தூண்டுவது தொடர்பானது), 295 (இழிவுபடுத்துதல் அல்லது வழிபாட்டுத் தலத்தை அல்லது பொருளை அவமதிக்கும் நோக்கத்துடன் இழிவுபடுத்துதல்). மதம்), மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 298 (மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்துடன் வார்த்தைகளைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது) வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் சாகர் சவுகான் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக காவல் துறை டிசிபி அகர்வால் கூறுகையில், "இந்த சுவரொட்டிகள் வெளியிட யார் பணம் தந்தது, அவை எங்கு அச்சிடப்பட்டது, இதன் பின்னணியில் மூளையாக செயல்பட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்" என்றார்.

இந்த நிலையில், சாகரை விடுதலை செய்யக்கோரி விஸ்வஹிந்து பரிஷத், பஜ்ரங் தள உறுப்பினர்கள் நந்த் காவல் நிலையத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர். வெறுப்புணர்வை பரப்புவதன் மூலம் வகுப்புவாத பதற்றத்தை தூண்டவே இந்த சுவரொட்டிகள் வெளியிடப்பட்டுள்ளதாக முஸ்லிம் மகாசபா அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

x