திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகெதர் முறையில் 3 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த ஆண், பெண் காவலர்கள் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணமான 2-வது நாளே காவலர் தலைமறைவு ஆனதால் பெண் காவலர் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருபவர் மதுமிதா. இவருடன் திருவாரூரை சேர்ந்த அஜித் என்பவரும் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இருவரும் ஒரே இடத்தில் பணியாற்றி வந்த நிலையில், அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாகவும் மாறியுள்ளது.
இதையடுத்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே சென்னையில் ஒரே வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக தங்கி ஒன்றாக லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெண் காவலர் மதுமிதா கர்ப்பமாகி உள்ளார். இதையடுத்து மதுமிதாவை திருமணம் செய்து கொள்ள காவலர் அஜீத் தயங்கியதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் திருவாரூருக்கு சென்ற அஜீத் அங்கு வேறு பெண்ணை திருமணம் செய்ய தயாராகி இருக்கிறார். இது குறித்து மதுமிதா போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரைத் தொடர்ந்து கடந்த மார்ச் 10-ம் தேதி மதுமிதாவின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோயிலில் வைத்து மதுமிதாவை திருமணம் செய்துள்ளார் அஜீத். இந்த திருமணத்தை பெரியமேடு சார்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே திருமணம் முடிந்த 2-வது நாளில், நண்பர் வீட்டிற்கு சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்ற அஜீத், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து திருவாரூர் சென்ற மதுமிதா தனது கணவர் அஜீத் வீட்டின் முன் தர்ணா போராட்டம் நடத்தியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் போலீஸார், மதுமிதாவை சமாதானப்படுத்தி உறவினர்களுடன் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு நிலவியது.