அடேங்கப்பா... ரூ.1,000 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி! நடிகர்களுக்கும் தொடர்பு உண்டா? போலீசார் விசாரணை!


கிரிப்டோ கரன்சி மோசடி

இந்தியா முழுவதும் 10 மாநிலங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்களிடம் 1,000 கோடி ரூபாய் கிரிப்டோ அடிப்படையிலான கரன்சி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த டேவிட் கெஸ் தலைமையிலானது சோலார் டெக்னோ அலையன்ஸ் (எஸ்டிஏ) எனப்படும் நிறுவனம். இதன் மூலம் ராஜஸ்தானைச் சேர்ந்த குர்தேஸ் சிங் சித்து என்பவர் இந்தியாவில் ஒடிசா, அசாம், பஞ்சாப், ராஜஸ்தான், பீகார், ஜார்க்கண்ட், ஹரியாணா, டெல்லி, மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைச் சேர்த்துள்ளார்.

இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் புதிய உறுப்பினர்களைச் சேர்த்து விட்டால், கிரிப்டோ காயின் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. இதனை நம்பி ஏராளமானோர் இந்த நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர்.

இந்த நிறுவனத்தின் விழா கடந்த வாரம் கோவாவில் உள்ள ஆடம்பர ஓட்டலில் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. இதில் நடிகர் கோவிந்தா உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் 1,000 கோடி ரூபாய் கிரிப்டோ அடிப்படையிலான போன்சி மோசடியில் ஈடுபட்டதாக பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு புகார் வந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போது இந்த மோசடி நடந்தது உண்மை எனத் தெரிய வந்தது. ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகரைச் சேர்ந்த குர்தேஜ் சிங் சித்து (40) மற்றும் அதன் ஒடிசா பிரிவு தலைவர் நிரோத் தாஸ் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகர் கோவிந்தா நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்தும், வேறு நடிகர்களுக்கும் இந்த மோசடியில் தொடர்பு உண்டா? நிகழ்ச்சிக்கு அவர்கள் பெற்ற தொகை விவரம் போன்றவைக் குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஒடிசாவைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் எஸ்டிஏ நிறுவனத்தில் உறுப்பினர்களாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐஜி ஜெய் நாராயண் பங்கஜ் கூறுகையில்," ஆரம்பத்தில் சில நாட்கள் உறுப்பினர்கள் நிறுவனம் மூலம் வருமானத்தைப் பெற்றுள்ளனர். ஆனால், அவர்களுக்கு பங்குகளை வழங்குவதாக குர்தேஸ் சிங் சித்துவும், எஸ்டிஏவின் மாநில தலைவர் நிரோத் தாஸீம் ஆசைகாட்டி ஏமாற்றியுள்ளனர். அத்துடன் உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய வருமானத்தையும் நிறுத்தியுள்ளனர். நிரோத் தாஸ் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.30,000 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது" என்றார்.

இந்த திட்டத்தைக் கொண்டு செல்ல ஹ்ங்கேரியைச் சேர்ந்த டேவிட் கெஸ்சுடன் குர்தேஸ் சிங் சித்து இந்தியாவில் பல இடங்களுக்குப் பயணம் செய்துள்ளார். தங்கள் திட்டங்களை விளம்பரப்படுத்தவும், புதிய உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கவும் பல யூடியூப் சேனல்களை இவர்கள் நடத்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கெஸ் மற்றும் குர்தேஜ் இருவரும் ஆடம்பரமாக வாழ்ந்ததாகவும், பவுன்சர்கள் புடைசூழ விலை உயர்ந்த கார்களில் அவர்கள் பவனி வந்ததும் தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

x