‘தாதா’ என்று கங்குலியை செல்லமாக கிரிக்கெட் ரசிகர்கள் அழைப்பதைப் போலவே ’இந்திய கிரிக்கெட்டின் சண்டைக்கோழி’ என்று விராட் கோலியை செல்லமாக அழைக்கிறார்கள் ரசிகர்கள். இந்திய சர்வதேச கிரிக்கெட்டில் தென்றலாய் இருந்த இந்திய அணி, இன்று புயலாக மாறி மற்ற அணிகளைத் துவைத்து எடுக்கிறது. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என ஒரு காலத்தில் வெல்ல முடியாமல் இருந்த நாடுகளைக்கூட விரட்டியடிக்கிறது. இந்தக் கிரிக்கெட் புயலின் கண்ணாக இருந்து எதிரணிகளை மிரட்டி வருபவர் விராட் கோலி.
பதிலடி மன்னன்
‘இந்திய கிரிக்கெட்டின் சண்டைக் கோழி‘ என்று விராட் கோலியைச் சொல்லலாம். கடந்த காலங்களில் இந்திய அணியை வழிநடத்தி வந்தவர்கள் (கங்குலியைத் தவிர!) சாந்த சொரூபியாகவே இருந்தார்கள். எதிரணி வீரர்கள் நம் வீரர்களை ‘ஸ்லெட்ஜிங்’ செய்து உசுப்பேற்றினாலும் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். ஆனால் இன்று, “நம்மில் ஒருவரைச் சீண்டினாலும், ஒட்டுமொத்த எதிரணியையும் பதிலுக்குச் சீண்ட வேண்டும்” என்ற புதிய யுத்த முறையைக் கொண்டுவந்துள்ளார் கோலி. கொஞ்சம் கங்குலி, கொஞ்சம் ரிக்கி பாண்டிங் என்று சண்டைக்கார கேப்டன்களின் கலவையாக நிற்கிறார். அத்துடன் பேட்டிங்கிலும் சச்சினின் சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்து வருகிறார். சமீபத்தில், 50வது சதத்தையும் எட்டி சாதனைப் படைத்துள்ளார்.
கிரிக்கெட் சக்ரவர்த்தியாக வலம் வரும் கோலியின் வாழ்க்கையில், சாதிக்க வேண்டும் என்ற லட்சிய வெறியை அவருக்குள் ஏற்படுத்திய விஷயம் லஞ்சம். அடிப்படைத் தேவை முதல் விளையாட்டு வரை எல்லாவற்றிலும் ஊறிக்கிடக்கும் லஞ்சம், ஒரு காலகட்டத்தில் விராட் கோலியின் வாழ்க்கையிலும் தலைநீட்டியது. அதைப் பற்றித் தெரிந்துகொள்ளும் முன், விராட் கோலியின் நதிமூலத்தைத் தெரிந்து கொள்வோம்...
விராட்டைத் தேர்ந்தெடுத்த கிரிக்கெட்
1988 நவம்பர் 5-ல் டெல்லியில் வசிக்கும் பஞ்சாபிய குடும்பத்தில் விராட் கோலி பிறந்தார். அவரது அப்பா பிரேம் கோலி, ஒரு வழக்கறிஞர். கோலியுடன் சேர்த்து அவருக்கு 3 குழந்தைகள். அதில் விகாஸ் கோலியும், பாவனாவும் விராட் கோலிக்கு மூத்தவர்கள்.
கடைக்குட்டி என்பதால், செல்லமாக வளர்க்கப்பட்டார் விராட் கோலி. சச்சினைப் போன்று சிறு வயதிலேயே பேட்டும் கையுமாக இருந்தார். அந்தக் காலத்தில் கோலி எதிர்கொண்ட முதல் பந்துவீச்சாளர், அவரது அப்பா பிரேம் கோலிதான். தினமும் பணியை முடித்து வீட்டுக்கு வரும் பிரேம் கோலி, மகனுக்குச் சிறிது நேரம் பந்து வீசுவார். அவர் பேட்டிங் செய்யும் ஸ்டைலைப் பார்த்து ரசிப்பார்.
“சிறுவயதில் நான் கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுக்கவில்லை. கிரிக்கெட்தான் என்னைத் தேர்ந்தெடுத்தது. எனக்கு நினைவு தெரிந்து நான் விளையாடிய ஒரே ஆட்டம் கிரிக்கெட் மட்டும் தான். என் அப்பா, அண்ணன், நண்பர்கள் என்று பலருடனும் சேர்ந்து கிரிக்கெட் ஆடியுள்ளேன். வீட்டில் பணக் கஷ்டம் இருந்த சூழலிலும் அந்தக் காலத்திலேயே 1,000 ரூபாய் விலையுள்ள பேட் ஒன்றை அப்பா எனக்கு வாங்கித் தந்தார். எனக்கு நினைவு தெரிந்து என் 6 வயது முதல் கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்தும் ஆடியும் வருகிறேன்” என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் கோலி.
கிரிக்கெட் ரசிகராக இருந்த பிரேம் கோலிக்கு, தனது மகனையும் ஒரு கிரிக்கெட் வீரனாக்க ஆசை. இதை நிறைவேற்ற மேற்கு டெல்லியில் உள்ள கிரிக்கெட் பயிற்சி முகாமில் 9 வயதிலேயே விராட் கோலியைச் சேர்த்தார். அன்றிலிருந்து விராட் கோலியின் வரலாற்றில் அவரது தந்தைக்கு அடுத்த இடத்தைப் பிடித்தார் பயிற்சியாளர் சுரேஷ் பத்ரா.
இன்று போட்டிகளில் விராட் கோலி சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் அநாயாசமாக அடிக்கிறார் என்றால், அதற்கெல்லாம் மூலகாரணமாய் இருந்தவர் சுரேஷ் பத்ராதான். கிரிக்கெட்டின் அரிச்சுவடிகளை விராட் கோலிக்குக் கற்றுக்கொடுத்த பத்ரா, கொஞ்சம் கொஞ்சமாக அவரை மெருகேற்றினார். அவரைத் தொடர்ந்து அடுத்த கட்டத்தில் ராஜ்குமார் சர்மா என்பவரிடம் கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டார் விராட் கோலி.
இந்த இருவர் தந்த பயிற்சியால், அக்காலகட்டத்தில் டெல்லியில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் எல்லாம் விராட் கோலியின் பேட் பேசியது. அவர் ஆடும் அணி நிச்சயம் வெற்றிபெறும் என்ற சூழல் உருவானது.
நேர்மையை போதித்த தந்தை
இந்தக் காலகட்டத்தில் தான் அவரது வாழ்க்கையில் லஞ்சம் பந்து வீசியது. ரஞ்சி போட்டிக்கான டெல்லி அணியில் கோலியை ஆடவைக்க லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும் என்று கிரிக்கெட் புரோக்கர்கள் சிலர் சொல்ல, கொதித்துப் போய்விட்டார் அவரது தந்தை பிரேம் கோலி.
லஞ்சம் கொடுக்கும் அளவுக்கு அவருக்கு வசதி இல்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அதைக் கொடுக்க மனம் இல்லை என்பதே முக்கியமானதாக இருந்தது. தனது மகன் எதையும் போராடித்தான் அடைய வேண்டும்; அப்போதுதான் அதன் அருமை அவனுக்குத் தெரியும் என்று உறுதியாய் நம்பினார் பிரேம் கோலி.
“லஞ்சம் கொடுத்து தான் என் மகனுக்கு அணியில் இடம் கிடைக்க வேண்டுமென்றால், அந்த இடம் அவனுக்குத் தேவையில்லை” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அதனால் கோலியின் வாய்ப்பு தட்டிப்போனது. தந்தையின் பிடிவாதத்தால் தன்னுடைய வாய்ப்பு பறிபோனது விராட் கோலியைத் துவளச் செய்தது. அதற்காக 3 நாட்கள் தந்தையிடம் பேசாமல், ஒழுங்காகச் சாப்பிடாமல் அழுது அடம்பிடித்தார். இந்தக் காலக்கட்டத்தில், நேர்மையாக விளையாடி, அணியில் இடம்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை அவரது தந்தை எடுத்துக்கூறினார். தந்தை சொன்ன அறிவுரையின் அர்த்தம் தனயனுக்குப் புரிந்தது. ஒருவழியாக சமாதானம் ஆனார்.
தந்தை கூறிய வழியில் கடுமையாக உழைத்த விராட் கோலியைக் கிரிக்கெட் ஏமாற்றவில்லை. 2006-ல் தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போட்டியில் 10 ரன்களை மட்டுமே எடுத்தபோதிலும் அடுத்தடுத்த ஆட்டங்களில் சிறப்பாக ஆடி இடத்தைத் தக்கவைத்துக்கொண்டார்.
விராட் கோலியை உலுக்கிய செய்தி
இந்தக் கட்டத்தில்தான் தன் வாழ்க்கையின் மிக முக்கியமான ஆட்டத்தில் கர்நாடகத்துக்கு எதிராக ஆடினார் விராட் கோலி. ரஞ்சி கோப்பையின் முக்கிய ஆட்டங்களில் ஒன்றான இதில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி 446 ரன்களைக் குவித்தது. அடுத்து ஆடிய டெல்லி அணி, அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறிக்கொண்டு இருந்தது. இந்தச் சூழலில் அணியை ஃபாலோ ஆனில் இருந்து மீட்க தனிநபராகப் போராடினார் கோலி. 2006 டிசம்பர் 18-ல் ஆட்டத்தின் இறுதியில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 103 ரன்களை எடுத்தது. தனிநபராய் போராடிய கோலி, 40 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.
அடுத்த நாள் ஆட்டத்தில் எப்படி பேட்டிங் செய்வது என்ற யோசனையுடன் தூங்கச் சென்ற விராட் கோலியை, நள்ளிரவில் ஒரு திடுக்கிடும் செய்தி எழுப்பியது. மகனின் கிரிக்கெட் வாழ்க்கையைப் பற்றி பெரிய அளவில் கனவு கண்ட அவரது தந்தை பிரேம் கோலி மாரடைப்பால் காலமானார் என்பதே அந்தச் செய்தி.