ஹரியானா மாநிலத்தில் தனியார் நிறுவனங்களில் 75 சதவீதம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வகை செய்யும், அம்மாநில அரசின் சட்டத்தை ரத்து செய்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு சார்பில் கடந்த 2020ம் ஆண்டு மாநில உள்ளூர் இளைஞர்கள் வேலை வாய்ப்பு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம், தனியார் நிறுவனங்களில் 75 சதவீத பணிகளை உள்ளூர் இளைஞர்களுக்கு வழங்க வேண்டும்.
இதை தங்களின் மிக முக்கியமான வெற்றியாக, மாநிலத்தில் துணை முதலமைச்சர் பொறுப்பு வகித்து வரும் ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யன் சவுதாலா தொடர்ந்து பிரகடனப்படுத்தி வந்தார்.
இதனிடையே இந்த சட்டத்தால் திறன்மிகு பணியாளர்களை பணிக்கு நியமிப்பதில் சிக்கல் நிலவுவதாக கூறி, பல்வேறு தரப்பினரும் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சந்தவாளியா மற்றும் ஹர்பிரித் கவுர் ஜீவன் ஆகியோர் விசாரித்து வந்தனர். இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், மாநில அரசு நிறைவேற்றிய இந்த சட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தனர்.
மாநில அரசு இயற்றியுள்ள இது போன்ற சட்டத்தால் தனியார் நிறுவனங்களை கட்டுப்படுத்த முடியாது எனவும், சொந்த மாநில இளைஞர்களை மட்டும் பணியமர்த்தக் கூறி தனியார் நிறுவனங்களை அரசு நிர்ப்பந்திக்க முடியாது எனவும் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
இதே நடவடிக்கையை அனைத்து மாநில அரசுகளும் மேற்கொண்டால் அது நாடு முழுவதும் பெரும் சிக்கல்களை உருவாக்கும் எனவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... வேர்ல்டு கப் பைனல்... நடிகர் அமிதாப் பச்சனுக்கு தொடர்ந்து மிரட்டல்!
பிக் பாஸ் வீட்டில் ரணகளம்... விசித்ராவுடன் மல்லுக்கட்டிய நிக்ஸன்!