தொடரும் பதற்றம்... பாமக எம்.எல்.ஏ இரவோடு இரவாக கைது!


சதாசிவம் எம்.எல்.ஏ

அன்புமணி கைதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மேட்டூர் தொகுதி பாமக எம்.எல்.ஏ சதாசிவத்தை போலீஸார் இரவோடு இரவாக கைது செய்தனர்.

என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று நெய்வேலியில் பாமக சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடந்த இந்த போராட்டம் பின்னர் வன்முறை போராட்டமாக மாறியது. என்.எல்.சி நிறுவனத்திற்குள் நுழைய முயன்ற அன்புமணி உள்ளிட்ட தலைவர்களை போலீஸார் கைது செய்ததை தொடர்ந்து போலீஸார் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து போலீஸார் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வெடித்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதன் பின் போலீஸாரால் கைது செய்யப்பட்ட அன்புமணி நேற்று இரவு விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் அன்புமணி கைது செய்யப்பட்டதை கண்டித்து மேட்டூர் தொகுதி பாமக எம்.எல்.ஏ சதாசிவம் உள்ளிட்ட அக்கட்சியினர் நேற்று இரவு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியல் கைவிடப்படவில்லை. மேலும் அந்த வழியாக சென்ற அரசு பேருந்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இதையடுத்து எம்.எல்.ஏ சதாசிவம் உள்ளிட்டோரை நேற்று இரவு போலீஸார் கைது செய்தனர். இதனிடையே நெய்வேலியில் நேற்று நடந்த வன்முறையின் போது கைது செய்யப்பட்ட 26 பேர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

x