இனிமேல் 500 ரூபாய் நோட்டு செல்லாதா?: 14 எம்.பிக்கள் எழுப்பிய கேள்விக்கு நிதி அமைச்சகம் விளக்கம்


500 ரூபாய் நோட்டு செல்லுமா?

உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்படலாம் என்பது போன்ற தகவல்கள் வெளியான சூழ்நிலையில், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி அதற்கு எழுத்துப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இந்த ஆண்டு மே மாதம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற்றது. இந்த சூழலில் 500 ரூபாய் உள்ளிட்ட உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்படலாம் என்பது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக மக்களவையில் நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

"கருப்புப் பணத்தை ஒழிக்க, பிற உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அரசு திட்டமிட்டுள்ளதா, அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?" என மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுப்ரியா சுலே உட்பட 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக விளக்கமளித்தார். அதில் “ தற்போதைக்கு வேறு எந்த உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டையும் பணமதிப்பிழப்பு செய்ய அரசு திட்டமிடவில்லை. மேலும் ஆயிரம் ரூபாய் நோட்டை புழக்கத்தில் விடவோ அரசிடம் எந்த திட்டமும் இல்லை" என்றார்.

x