இந்தியாவின் அஞ்சு பாகிஸ்தானில் பாத்திமா ஆனார்; மதம் மாறி ஃபேஸ்புக் காதலனை கரம் பிடித்ததன் மர்ம பின்னணி!


பாகிஸ்தானில் ஃபேஸ்புக் காதல் ஜோடி; நஸ்ருல்லாவுடன் அஞ்சு என்கிற பாத்திமா

ராஜஸ்தானை சேர்ந்த் அஞ்சு என்ற பெண்மணி தனது ஃபேஸ்புக் காதலனை காண பாகிஸ்தான் சென்றதில், அங்கேயே மதம் மாறி மணம் முடித்து இருப்பதாக பாகிஸ்தானில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதே வேளையில் இந்த திருமணத்துக்கு பாகிஸ்தானில் தரப்படும் முக்கியத்துவம் இந்தியாவில் ஐயத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் அரவிந்த் என்பவரை மணந்து 15 வயது மகள் மற்றும் 6 வயது மகன் ஆகிய இரு குழந்தைகளுக்கு தாயாக இருப்பவர் அஞ்சு. டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக பணியாற்றி வந்த அஞ்சு, கடந்த வாரம் வீட்டார் அறியாது திடீரென பாகிஸ்தானுக்கு கிளம்பிச் சென்றார். அங்கே அஞ்சுவின் ஃபேஸ்புக் காதலர் நஸ்ருல்லா காத்திருந்தார்.

ஃபேஸ்புக் வாயிலாக 2019 முதலே நஸ்ருல்லா உடன் அஞ்சுவுக்கு பழக்கமுண்டு. இருவரின் நட்பும் ஒரு கட்டத்தில் காதலாக, காதலனை பார்க்க பாகிஸ்தான் பறந்தார். ஒரு மாத விசாவில், சட்டப்படியான பயணத்தில் வாகா எல்லை தாண்டி பாகிஸ்தானில் பிரவேசித்தார்.

அப்போது இந்தியாவில் சீமா ஹைதர் விவகாரம் பெரிதாக பேசப்பட்டு வந்தது. பாகிஸ்தானை சேர்ந்த மணமான பெண்ணான சீமா, இந்தியாவின் உத்தர பிரதேசத்தை சேர்ந்த சச்சின் மீனா என்ற இளைஞனுடன் பப்ஜி விளையாட்டில் அறிமுகமாகி காதலில் விழுந்தார். பின்னர் நேபாளம் வாயிலாக இந்தியாவில் ஊடுருவி, காதலனுடன் குடும்பம் நடத்தி வந்தார். அவரது சட்ட விரோதமான ஊடுருவல் காரணமாக கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதே பாணியில், எதிர்திசையில் - இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பயணப்பட்டிருக்கிறார் அஞ்சு. அவர் அங்கே சென்றதும், பாகிஸ்தானின் சீமா ஹைதருடன் ஒப்பிட்டு ஊடகங்களில் செய்தியானார். அப்போது அஞ்சு, “நான் சீமா போலில்லை. ஃபேஸ்புக் நண்பரை சந்திக்கவே வந்தேன். விசா காலம் முடிந்ததும் ராஜஸ்தான் திரும்பிவிடுவேன்” என்றார். இதனை நஸ்ருல்லாவும் வழிமொழிந்தார்.

ஆனால் இரண்டொரு நாளில் என்ன நடந்ததோ, தற்போது மதம் மாறி நஸ்ருல்லாவை சட்டப்படி அஞ்சு திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. மேலும், நஸ்ருல்லாவை கரம் பிடிப்பதற்காக, அஞ்சு மதம் மாறி பாத்திமா எனவும் பெயர் மாற்றம் கண்டுள்ளார். 35 வயது அஞ்சு என்கிற பாத்திமா, 29 நஸ்ருல்லாவை மணம் முடித்தது மட்டுமன்றி, மணஜோடிக்கு விஐபி பாதுகாப்பு வழங்கப்படுவதும், அந்த ஜோடி பூங்கா, சாலை என உலாத்துவதை ட்ரோன் வைத்து எல்லாம் சினிமா போல வீடியோ எடுத்து பரப்புவதும் இந்தியாவில் ஐயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து அஞ்சுவின் பின்னணி குறித்து ராஜஸ்தானில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் காதலனை காணச் சென்று அவரையே மணம்முடித்த இந்தியப் பெண்ணுக்கு பாகிஸ்தான் அத்தனை முக்கியத்துவம் தருவதன் ரகசியம் இன்னமும் விளங்காது இருக்கிறது. அதே போன்று, காதலனுக்காக இந்தியாவுக்குள் ஊடுருவிய சீமா மீதும் , அவர் பாகிஸ்தான் உளவாளியாக இருக்கக்கூடுமோ என்ற ஐயமும் இந்திய புலனாய்வு அமைப்புகளுக்கு எழுந்துள்ளது.

திருமணமான பெண்களின் களவு காதல், அதற்காக நாட்டின் எல்லை தாண்டி அவர்கள் பயணிப்பது, அவர்கள் மீது உளவு சந்தேகம் எழுவது என திரைப்படங்களை விஞ்சுமளவுக்கு இந்த விவகாரம் விறுவிறுப்படைந்து வருகிறது.

x