ஒடிசாவில் பாம்புக் கடியால் மூன்று குழந்தைகள் உள்பட நான்கு பேர் இன்று உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவில் பொதுவாக ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் பாம்புகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். இந்த காலத்தில் பாம்புக் கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.
இந்தநிலையில், ஒடிசாவின் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற பாம்புக் கடி சம்பவங்களில் மூன்று குழந்தைகள் உள்பட 4 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
ஒடிசாவில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில் கதுரியா கிராமத்தைச் சேர்ந்தவர் மினாட்டி மஹாகுடா. இவர் நேற்றிரவு தனது ஒன்றரை வயது மகனுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இருவரையும் பாம்பு கடித்தது. இன்று காலை வீட்டில் மயங்கிக் கிடந்த அவர்கள் இருவரையும் உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் கிசிச்சை பலனின்றி ஒன்றரை வயது சிறுவன் பலியானார். மினாட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதே போல தியோகர் மாவட்டத்தில் உள்ள ஜங்கலிகுடா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கௌரங்கா டெஹூரி(14). அவரது சகோதரர் சௌப்யா டெஹூரி(8). இவர்கள் இருவரும் நேற்று இரவு மாடியில் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும் பாம்பு கடித்தது. இதையடுத்து அவர்களை தியோகர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் இன்று உயிரிழந்தனர். ஒடிசாவில் உள்ள அம்பாபானி கிராமத்திற்கு உட்பட்ட சர்கிகுடா கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாம்பு கடித்து உயிரிழந்தார்.
இதுதொடர்பாக ஒடிசா பொதுசுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்," ஒடிசாவில் உள்ள அனைத்து மருத்துவமனைளிலும் பாம்பு கடிக்கு மருந்து இருப்பில் உள்ளது. எனவே, சூனியம், பிற மூடநம்பிக்கையும் செய்து நேரத்தை வீணடிக்காமல் பாம்புக் கடியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று உயிரைக் காப்பாற்றுங்கள்" என்று அறிவுறுத்தியுள்ளது.