நீல நிற காளான்கள் கண்டுபிடிப்பு! பொதுமக்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!


அரிய வகை நீல நிற காளான்

தெலங்கானா மாநிலத்தில் உள்ள வனப்பகுதியில் அரிய வகையிலான நீல நிற காளான்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை மருந்து தயாரிக்க உதவுமா என ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள அடிலாபாத் வன பகுதியில் காவால் என்ற புலிகள் காப்பகம் உள்ளது. இந்த வன பகுதிகளில் வனத்துறையினர் அவ்வப்போது ரோந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் வனத்துறையினர் வழக்கம் போல் ரோந்து சென்றுள்ளனர்.

அப்போது அந்த காட்டில் எங்கும் காணாத அரிய வகையிலான நீல நிற காளான்களை கண்டுள்ளனர். இதையடுத்து முழுகுவில் உள்ள வனக்கல்லூரி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு நீல நிற காளான்கள் குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த உதவி பேராசிரியர் ஜெகதீஷ் பத்துலா தலைமையிலான குழுவினர், குறைந்த எண்ணிக்கையில் காணப்பட்ட நீல நிற காளான்களை சேகரித்து ஆராய்ச்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

வயிற்று புண்ணை ஆற்றும் குணம் காளான்களில் உள்ளது. தற்போது கண்டறியப்பட்டுள்ள ஸ்கை ப்ளு மஸ்ரூம் என்ற வகை காளான்களின் செவுள் பகுதியில் இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிறங்கள் உள்ளன. இவை விஷ தன்மை கொண்டதா என ஆராய்ச்சிக்கு பின் தான் தெரிய வரும். மேலும் தொற்று நோய்கள், ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் தொடர்பான நோய்களுக்கான மருந்தினை இதன் மூலம் தயாரிக்க முடியுமா என்பது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளபட உள்ளது. இந்நிலையில் நீல நிற காளான்களை பொதுமக்கள் உணவாக தற்போதைக்கு பயன்படுத்த வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

x