தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் யமுனை ஆற்றில் அபாய கட்டத்தை எட்டும் அளவுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், யமுனை ஆற்றில் வலையில் சிக்கிய டால்பினை, சமைத்து சாப்பிட்ட மீனவர்களை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை காரணமாக உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் யமுனை நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளத்தில் பெருநகரங்கள் மிதப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், யமுனை ஆற்றில் மீன் பிடிக்க மக்கள் தொடங்கி விட்டனர்.
கடந்த 22-ம் தேதி 4 மீனவர்கள் பெருக்கெடுத்து ஓடிய யமுனா ஆற்றில் மீன் பிடிக்க வலை வீசியுள்ளனர். சில மணி நேரம் கழித்து வலையை பார்த்த போது, அவர்களின் வலையில் டால்பின் மீன் சிக்கியிருந்தது தெரிய வந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் யமுனை ஆற்றில் டால்பின் சிக்கியதால் மீனவர்கள் ஆச்சரிப்பட்டனர். இதையடுத்து, மீனவர்கள் டால்பின் வீட்டிக்கு கொண்டு சென்று சாலையோரம் வைத்து சமைத்து சாப்பிட்டுள்ளனர்.
அப்போது, சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதையடுத்து, வனத்துறையினருக்கு புகார் சென்றுள்ளது. டால்பினை சமைத்து சாப்பிட்ட மீனவர்களை வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வனத்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.