இந்தியாவில் மேலும் 21 பசுமை விமான நிலையங்கள்.. பரந்தூர் விமான நிலையத்தின் நிலைமை என்ன?


பசுமை விமான நிலையம் - மாதிரி படம்

இந்தியாவில் புதிதாக 21 பசுமை விமான நிலையங்களை அமைக்க மத்திய அரசின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவாவில் மோபா, மகாராஷ்டிராவில் நவிமும்பை, ஷீரடி மற்றும் சிந்துதுர்க், கர்நாடகாவில் கல்புரகி, விஜயபுரா, ஹாசன் மற்றும் சிவமொஹா, மத்திய பிரதேசத்தின் குவாலியர், உத்தரப்பிரதேசத்தில் குஷிநகர் மற்றும் நொய்டா, குஜராத்தில் தோலேரா மற்றும் ஹிராசர், புதுச்சேரியில் காரைக்கால், கர்னூல் உட்பட 21 புதிய பசுமை விமான நிலையங்களை அமைக்க மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

இவற்றில் துர்காபூர், ஷீரடி, கண்ணூர், பாக்யாங், கலபுகி, கர்னூல், சிந்துதுர்க், குஷிநகர், இட்டாநகர், மோபா மற்றும் சிவமொஹா என 11 பசுமை விமான நிலையங்கள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், பசுமை விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான முதல் கட்ட அனுமதி, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது.

பசுமை விமான நிலைய கொள்கையின்படி, இந்த முன்மொழிவு இந்திய விமான நிலைய ஆணையம், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஆகிவற்றுக்கு அவர்களின் கருத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சர் வி.கே.சிங் சார்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

x