உங்களால்தான் நாடு பாதுகாக்கப்படுகிறது - ராணுவத்தினரிடம் பிரதமர் மோடி பேசியது இதுதான்!


ஒவ்வொரு தீபாவளி பண்டிகையையும், எல்லையில் உள்ள நம் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை பிரதமர் நரேந்திர மோடி வழக்கமாக வைத்துள்ளார். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை, லடாக்கில் உள்ள கார்கிலில் வீரர்களுடன் கொண்டாடினார்.

இந்நிலையில், இந்த தீபாவளியை, இமாச்சல பிரதேசத்தின் லெப்ச்சாவில் உள்ள எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் உற்சாகமாக கொண்டாடினார். இந்தோ - திபெத் போலீஸ் படையின் சீருடையில் வந்த பிரதமர் மோடி, கருப்பு நிற குளிர் கண்ணாடி, தொப்பி அணிந்து கம்பீரமாக காட்சியளித்தார். வீரர்களுக்கு இனிப்புகளை ஊட்டிவிட்டு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

அதன் பின் வீரர்கள் மத்தியில் பிரதமர் பேசியதாவது: கடந்த 30 - 35 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையை வீரர்களுடன் கொண்டாடி வருகிறேன். நான் பிரதமராக, குஜராத் முதல்வராக ஆவதற்கு முன்பிருந்தே தீபாவளி பண்டிகையை உங்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளேன். நம் வீரர்கள் எப்பொழுதும் தங்கள் உயிரை பணயம் வைத்து முன்னேறிச் சென்றுள்ளனர். எல்லையில் உள்ள தகர்க்க முடியாத பலமான சுவராக அவர்கள் உள்ளனர். எல்லையில் இமயமலையைப் போல நிற்கும் உங்களால் நம் நாடு பாதுகாக்கப்படுகிறது.

கடந்த தீபாவளி முதல் இன்றைய தீபாவளி வரை பல்வேறு சாதனைகளை நம்நாடு செய்து முடித்துள்ளது.சந்திரயான் - 3 வெற்றி, ஆதித்யா எல்1 வெற்றிகரமாக ஏவப்பட்டது, ஆசிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில், 100க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றது, புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட்டது, மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம், 'ஜி - 20' மாநாட்டு தலைமை, உலக அளவில் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்தது என, இந்த சாதனை பட்டியல் மிக நீளமானது.

ஹிமாச்சல பிரதேசத்தில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி

நம் நாடு, தன் முழு பலத்துடன் வளர்ச்சியின் உச்சத்தை தொடுகிறது என்றால், அதற்கான பெருமை நமது வீரர்களின் திறன்கள், உறுதி, தியாகங்களையே சேரும். பண்டிகைகளின் போது கூட குடும்பத்தை விட்டு தொலைதூரத்தில் நம் எல்லைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களின் அர்ப்பணிப்பு அவர்களின் கடமை உணர்ச்சியை வெளிப்படுத்துகிறது. உங்களுக்கு இந்த நாடே கடமைப்பட்டுள்ளது” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதையும் வாசிக்கலாமே...

x