குஜராத்தில் வெள்ளம்: வதோதரா குடியிருப்பு பகுதிகளில் 2 நாளில் 24 முதலைகள் மீட்பு


வதோதரா: அரபிக் கடலில் உருவாகியுள்ள அஸ்னா புயலால் குஜராத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வதோதரா மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து 12,000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அஜ்வா அணையிலிருந்து அதிக தண்ணீர் திறக்கப்பட்டதால் விஸ்வாமித்ரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்த ஆற்றில் இருந்த முதலைகள் கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்தன. இவற்றை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து வதோதரா வனத்துறை அதிகாரி கரன்சிங் ராஜ்புத் கூறியதாவது:

விஸ்வாமித்ரி ஆற்றில் சுமார் 440 முதலைகள் உள்ளன. ஆற்றுவெள்ளம் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்றதால், அதில் உள்ள விலங்குகளும், வனப்பகுதிகளில் உள்ள விலங்குகளும் வெளி யேறும் நிலை ஏற்பட்டது.

குடியிருப்பு பகுதிகளில் இருந்து 2 நாளில் 24 முதலைகளை நாங்கள் மீட்டோம். இது தவிர பாம்புகள், ஆமைகள், முள்ளம் பன்றிகள் போன்றவற்றையும் மீட்டோம். விஸ்வாமித்ரி ஆற்றில் வெள்ளம் சற்று குறைந்துள்ளது. மீட்கப்பட்ட முதலைகள் மீண்டும் ஆற்றில் விடப்படும்.

இவ்வாறு கரன்சிங் ராஜ்புத் கூறினார்.

புயல் இன்று கரையை கடக்கும்: அரபிக் கடலில் உருவாகியுள்ள அஸ்னா புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

x