புதுடெல்லி: ‘‘பெண்களின் பாதுகாப்புக்கு பல கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றை நாம்தீவிரமாக செயல்படுத்த வேண்டும்’’ என நீதித்துறை மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். உச்ச நீதிமன்றம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகளை நிறைவடைவதை கொண்டாடும் வகையில் சிறப்பு தபால் தலை மற்றும் நாணயங்களை பிரதமர் மோடி வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வல், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் கபில் சிபில் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:
பாதுகாப்புக்கு உத்தரவாதம்: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தற்போது அதிகரித்துள்ளது மிகவும்கவலையளிக்கிறது. பெண்களின்பாதுகாப்புக்கு கடுமையான பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால், நாம்அவற்றை தீவிரமாக செயல்படுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பானவழக்குகளில் விரைவானமுடிவுகள் எடுக்கப்படும்போதுதான், பாதுகாப்புக்கான அதிக உத்தரவாதம் கிடைக்கும்.
நீதித்துறை மற்றும் உச்சநீதிமன்றத்தின் மீது இந்திய மக்கள் எப்போதும் அவநம்பிக்கை கொண்டதில்லை. அதனால், உச்சநீதிமன்றம் தொடங்கப்பட்ட இந்த 75 ஆண்டுகள், ஜனநாயகத்தின் தாயாக இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளது. நமது ஜனநாயக அமைப்புகள் மீதுநாம் வைத்திருக்கும் நம்பிக்கையை உச்ச நீதிமன்றம் நிலைநிறுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம், இந்திய அரசியல்சாசனத்தின் பயணம் மற்றும் இந்திய ஜனநாயகத்தின் பயணம். அரசியல்சாசனத்தின் பாதுகாவலனாக நீதித்துறை கருதப்படுகிறது. உச்ச நீதிமன்றம் தனது கடமைகளை நிறைவேற்றியதற்கு பாராட்டுக்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.