கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை விவகாரத்தில் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து வெளியிட்ட 8 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், இரண்டு பேரிடம் போலீஸார் இன்று தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் கடந்த 7-ம் தேதி முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கோவை ராமநாதபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அக்கம்பக்கத்தினர் அவரது உறவினர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்திய போலீஸார் தொடர்ந்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே டிஐஜி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சிலர் சமூக ஊடகங்களில் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டிருந்தனர். இதனை தொடர்ந்து டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக சமூக ஊடகங்களில் தவறாக பதிவிட்டவர்கள், சமூக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தவர்கள் என 8 பேருக்கு போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
அதில் வாராகி மற்றும் யூடியூப்பர் ராஜவேல் நாகராஜன் ஆகிய இரண்டு பேர் இன்று காலை கோவை, ராமநாதபுரம் காவல் நிலைய போலீஸார் முன்பு விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக டிஐஜி தற்கொலை தொடர்பாக தெரிவித்த கருத்துகள் எந்த அடிப்படை ஆதாரத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தெரிவித்து யார் உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்மன் அனுப்பிய 8 பேரில் இருவர் விசாரணைக்கு ஆஜாரான நிலையில் மீதமுள்ள 6 பேரும் விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.