காஷ்மீரில் ஆபரேஷன் த்ரிநேத்ரா-2; என்கவுன்டரில் 4 பயங்கரவாதிகள் களையெடுப்பு


காஷ்மீரில் பாதுகாப்பு படையினர்

எல்லை தாண்டி வந்து ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை அழித்தொழிக்கும், ராணுவம் - காவல்துறை கூட்டு நடவடிக்கை ;ஆபரேஷன் த்ரி நேத்ரா' என்ற பெயரில் வேகமெடுத்துள்ளது.

காஷ்மீரின் எல்லை மாவட்டமான பூஞ்ச் பகுதியில் பாதுகாப்பு படைகள் மேற்கொண்ட இந்த ஆபரேஷன் நடவடிக்கையில் இன்று காலை 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு தொடங்கி ராணுவம் மற்றும் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட தாக்குதலின் முடிவாக, பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். முன்னதாக இரவு நெடுக அப்பகுதியில் இருதரப்பு துப்பாக்கிச் சண்டை நீடித்தது. பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதை காவல்துறையின் ஜம்மு மண்டல கூடுதல் டிஐஜி முகேஷ் சிங் உறுதி செய்துள்ளார்.

சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் வசமிருந்து நான்கு ஏகே-47 துப்பாக்கிகள், 2 பிஸ்டல்கள் மற்றும் இதர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாச வேலைக்கான ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்களுடன் எல்லை தாண்டி ஊடுருவும் பயங்கரவாதிகள், சில காலத்துக்கு பல்வேறு பகுதிகளில் பதுங்கியிருந்து, சதித்திட்டம் வகுத்துப் பின்னர் வெளிப்படுகின்றனர். அதற்கு முன்னதாகவே, உள்ளூர் உளவுத் தகவல்கள் மூலமாக மோப்பமிட்டு, பதுங்கல் பயங்கரவாதிகளை களையெடுக்கும் கூட்டு நடவடிக்கை ஆபரேஷன் த்ரிநேத்ரா என்ற பெயரில் ஜம்மு காஷ்மீரில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

x