ராஜஸ்தான் மாநிலத்தின் பாகிஸ்தான் எல்லையோரம் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு வாக்குச்சாவடி இந்திய அளவில் கவனம் பெற்றிருக்கிறது. காரணம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 35 வாக்காளர்களுக்காக இந்த வாக்குச்சாவடியை தேர்தல் ஆணையம் இங்கே அமைத்துள்ளது.
தேர்தல் காலத்து வினோதங்கள் ஏராளம். அவற்றில் ஒன்று ராஜஸ்தான் மாநிலம் பர்மர் மாவட்டத்தில் நடந்தேறி உள்ளது. இங்கு இந்திய - பாகிஸ்தான் சர்வதேச எல்லையை ஒட்டி ’பட்மர் கா பார்’ என்ற குக்கிராமம் அமைந்துள்ளது. இங்கு வசிப்போரில் மொத்தம் 35 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் வந்தால் இவர்கள் அனைவரும் 20 கிமீ அப்பால் இருக்கும் வாக்குச்சாவடிக்கு சென்றாக வேண்டும்.
போக்குவரத்து வசதிகள் அற்ற அந்த குக்கிராமத்தில் இருந்து பொடிநடையாகவோ, ஒட்டகம் மீதேறியோ பயணப்பட வேண்டும். இதனால் வாக்குச்சாவடிக்கு எளிதில் ஆண்கள் பயணப்பட, பெண்கள் தயக்கத்துடன் கிராமத்திலேயே தங்கிவிடுவார்கள். 17 பெண், 18 ஆண் என மொத்தம் 35 வாக்காளர்களைக் கொண்ட, இந்த கிராமத்தினருக்கான வாக்குச்சாவடி, கடந்த தேர்தல் வரை 20 கிமீ அப்பால் இருந்தது.
தற்போது முதல்முறையாக கிராமத்திலிருக்கும் பெண்களும் எளிதில் வாக்களிக்கும் வகையில், அந்த குக்கிராமத்திலேயே வாக்குச்சாவடி அமைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதற்கேற்ப 35 வாக்காளர்களுக்கான ஒரு பிரத்யேக வாக்குச்சாவடி அங்கே அமைக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தின் மிகச்சிறிய வாக்குச்சாவடி என்ற சிறப்பும் அதற்கு சேர்ந்திருக்கிறது.
5 மாநிலங்களில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தல்களின் வரிசையில், நவ.25 அன்று ராஜஸ்தானின் இந்த எல்லையோர கிராமத்திலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஒரே கிராமத்தின் 35 பேருக்கான இந்த வாக்குச்சாவடியில், ஒரு மணி நேரத்தில் வாக்குப்பதிவு முடிவடைந்து விடும். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இந்த கிராமத்தின் பெண் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற இருக்கின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...