[X] Close

தெலங்கானா ஆணவக்கொலையில் கூலிப்படை சிக்கியது: கோடிகளில் பேரம் பேசியது அம்பலம்


pranay-roy-murder-news

  • kamadenu
  • Posted: 19 Sep, 2018 12:56 pm
  • அ+ அ-

தெலங்கானா ஆணவக்கொலையில் பிரனய் குமாரை கொலை செய்த பிஹார் கூலிப்படையை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இதற்காக 2.5 கோடி ரூபாய் கேட்டு பேரம் பேசியது தெரிய வந்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் பிரனய் குமார் - அம்ருதா இருவரும் பள்ளியில் படித்தபோதே நண்பர்கள். பின்னர் இருவரும் காதலிக்கத் தொடங்கினர். பிரனய் குமார் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களது காதலுக்கு அம்ருதாவிவன் தந்தை மாருதி ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எனினும் மாருதி ராவின் எதிர்ப்பையும் மீறி இருவரும் கடந்த ஜனவரி மாதம் ஹைதராபாத் சென்று திருமணம் செய்து கொண்டனர்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த மாருதி ராவ் பிரனயைத் தொடர்ந்து மிரட்டி வந்திருக்கிறார். அம்ருதா கர்ப்பமானதால், மாருதி ராவ் மிகுந்த கோபமடைந்துள்ளார். அம்ருதா, மருத்துவப் பரிசோதனைக்காக சமீபத்தில் பிரனய் குமாருடன் மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று இருவரையும் மறித்துள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் பிரனய் குமாரை அரிவாளால் சரமாரியாக அந்தக் கும்பல் வெட்டிச் சாய்த்தது. இதில் அவர் உயிரிழந்தார்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை தனது மகள் திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த மாருதி ராவ் கூலிப்படையை ஏவிக் கொலை இந்த கொலையை செய்தது தெரிய வந்தது. கர்ப்பத்தைக் கலைக்குமாறு கூறி தந்தை மிரட்டியதாக மகள் அம்ருதா போலீஸில் வாக்குமூலம் அளித்தார். நாட்டை உலுக்கிய இந்த ஆணவக் கொலையில் தொடர்புடைய கூலிப்படையை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

பிரனய் வெட்டிக் கொலை செய்யப்பட்டபோது, அந்தக் காட்சிகள் மருத்துவமனைக்கு வெளியே இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. அதில் பதிவான கூலிப்படையைச் சேர்ந்தவர்களின் உருவத்தை வைத்து போலீஸார் துப்பு துலக்கி அவர்களை கைது செய்துள்ளனர்.
பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த அஸ்கர் அலி உள்ளிட்ட மூன்று பேர் சமஸ்டிபூரில் கைது செய்யப்பட்டனர். அவர்களை ஹைதராபாத்துக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். விசாரணை குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில் ‘‘கூலிப்படையினரை, மாருதி ராவின் சகோதரர் தொடர்பு கொண்டுள்ளார். 

ஹைதரபாத்தைச் சேர்ந்த ஏஜெண்ட் கரீம் என்பவர் மூலம் கூலிப்படையை அணுகியுள்ளனர். கொலை தொடர்பாக மாருதி ராவின் வீட்டில் அனைவரும் சதி ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது இந்த கொலையைச் செய்ய கூலி்ப்படை தரப்பில் 2.5 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளது. பின்னர் பேரம் பேசி 1 கோடி ரூபாய்க்கு கொலை செய்வதாக அவர்கள் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது.

இதையடுத்து 50 லட்சம் ரூபாய் முன் பணம் தருமாறு கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் கோரியுள்ளனர். ஆனால் மாருதி ராவ் 15 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். கரீமிடம் 15 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளனர். அதில் ஒரு லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்ட கரீம், பாரிக்கு 8 லட்சமும், அஸ்கர் அலிக்கு 6 லட்சமும் கொடுத்துள்ளார்.

கைது செய்யப்பட்ட கூலிப்படையினர், குஜராத் முதல்வராக பிரதமர் மோடி இருந்தபோது உள்துறை அமைச்சராக இருந்த ஹர்திக் பாண்டேயா கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர்கள் என போலீஸார் தெரிவித்தனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close