குடிபோதையில் நண்பனைக் கொன்று உடல் கிணற்றில் வீச்சு: 6 மாதங்களுக்குப் பின் 4 பேர் கைது


கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

யார் பெரியவர் என்ற பிரச்சினையில் குடிபோதையில் நண்பனை அடித்துக் கொன்று கிணற்றில் வீசிய இளைஞர்களை ஆறு மாதங்களுக்குப் பிறகு போலீஸாரிடம் கையும், களவுமாக சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

காஞ்சிபுரம் மாநகராட்சி பிள்ளையார்பாளையம் சோலை ராமசாமி தெருவில் வசித்து வந்தவர் கிரி என்கின்ற கிருபாகரன்(30). இவர் கடந்த ஜனவரி 13-ம் தேதி போகிப் பண்டிகை முதல் காணவில்லை என அவரது சகோதரிகள் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், கிருபாகரன் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.ஆனால் ஆறு மாதங்களாக எவ்விதமான துப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில் பல்லவர் மேடு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், குடிபோதையில் கிருபாகரனை கொலை செய்த விஷயம் குறித்து உளறியுள்ளனர்.

இச்செய்தி அரசல், புரசலாக சிவகாஞ்சி போலீஸாரின் காதுகளுக்கு எட்டியது. உடனடியாக களத்தில் இறங்கிய சிவகாஞ்சி போலீஸார், பல்லவர் மேடு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் எட்டு பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, பல்லவர் மேடு பகுதியை சேர்ந்த ஹரீஷ், ஆகாஷ், கார்த்தி, தாமோதரன், ஆகிய நான்கு இளைஞர்களும் கிருபாகரனுடன் நட்பாக பழகி வந்ததாகவும், நண்பர்கள் அனைவரும் கடந்த போகிப் பண்டிகை அன்று மது அருந்தியுள்ளனர். அப்போது யார் பெரியவர் என வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது இளைஞர்கள் நான்கு பேரும் ஒன்று சேர்ந்து கிருபாகரனை அடித்துக் கொலை செய்துள்ளனர்.

இதன் பின் கிருபாகரன் உடலில் கல்லை கட்டி பிள்ளையார் பாளையம் - புதுப்பாளையம் தெரு பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பாழடைந்த கிணற்றில் வீசிச் சென்றுள்ளனர். மேலும் அவ்வப்போது உடல் மேலே வராத அளவிற்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தாக போலீஸாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர்.

கிருபாகரன் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி நான்கு இளைஞர்களையும் சிவகாஞ்சி போலீஸார் கைது செய்து உள்ளனர்.

மேலும் கிருபாகரன் கொலை செய்யப்பட்டு உடல் வீசப்பட்ட பாழடைந்த கிணற்றில் இருந்து தண்ணீரை இறைத்து உடலை தீயணைப்பு துறையினர், வருவாய்த்துறையினர் முன்னிலையில் போலீஸார் மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

குடிபோதையில் யார் பெரியவர் என்ற தகராறில் நண்பனை அடித்துக் கொன்று கொலை செய்து உடலைத் கிணற்றில் வீசிய சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x