உசிலம்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒரு கிலோ வெள்ளி, 20 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்கள், சிசிடிவி கேமராக்களின் பதிவுகளையும் திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மலைப்பட்டியைச் சேர்ந்தவர் அன்பு. இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தோசை மற்றும் முறுக்கு வியாபாரம் செய்து வருகிறார். ஜெய்ப்பூரில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் இவரது மலைப்பட்டியில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் 1 கிலோ வெள்ளி, 20 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
தினசரி வீட்டைக் கவனித்துவரும் அன்புவின் தாயார் கழுவாயம்மாள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்து போலீஸாருக்கும், தனது மகனுக்கும் தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகள் பதிவுகளையும் ஹார்டிஸ்க் உடன் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.