ரவுடியுடன் சேர்ந்து கஞ்சா விற்பனை: கண்டித்த மந்திரவாதியை கொன்ற நண்பர்: சென்னையில் அதிர்ச்சி


மந்திரவாதி சிக்கந்தர்

உடன் தங்கியிருந்த நண்பர், ரவுடியுடன் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்ததை கண்டித்ததால் மந்திரவாதி படுகொலை செய்யப்பட்டார்.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சையது சிக்கந்தர்(38). இவர் கடந்த 5 ஆண்டுகளாக பாடிகுப்பம் காந்தி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். மேலும் சிக்கந்தர் செய்வினை செய்வது, எடுப்பது உள்ளிட்ட மாந்திரீக தொழில் செய்து வந்துள்ளார். நேற்று இரவு சிக்கந்தர் உறவினர்கள் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது அவர் போன் சுவிட்ஆப் செய்யப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த உறவினர்கள் இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் திருமங்கலம் போலீஸார் மந்திரவாதி சிக்கந்தர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது. பின்னர் போலீஸார் மந்திரவாதி சிக்கந்தர் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இக்கொலை சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மந்திரவாதி சிக்கந்தருடன் அவரது நண்பர் விக்கி உடன் தங்கி இருந்தது தெரியவந்தது. மேலும் விக்கி திருமங்கலம் ரவுடி புருஷோத்தமன் உடன் பழகி கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானதும், பின்னர் ரவுடி புருஷோத்தமனும், விக்கியும் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் மந்திரவாதி சையது சிக்கந்தருக்கு தெரியவர அவர் விக்கியை கண்டித்ததாக கூறப்படுகிறது.

மேலும், மந்திரவாதி சிக்கந்தர் விக்கியை ஓரினச்சேர்க்கைக்கு வருமாறு வற்புறுத்தியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த விக்கி மந்திரவாதி சிக்கந்தரை கொலை செய்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீஸார் தலைமறைவான விக்கி மற்றும் ரவுடி புருஷோத்தமன் ஆகிய இருவரை தீவிரமாக தேடிவருகின்றனர். மேலும் மந்திரவாதி சிக்கந்தர் கொலைக்கு வேறு ஏதேனும் காரணமாக என பல கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x