வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம்: பிறப்பு சான்றிதழ் கேட்டு போராடும் கணவர்!


தினேஷ்குமார்- சிவசங்கரி தம்பதி

இயற்கை வழி வாழ்வியல் முறையை பின்பற்றி வீட்டிலேயே குழந்தை பெற்றுள்ளார் தஞ்சையை சேர்ந்த இளம்பெண் ஒருவர். அவருக்கு அவரது கணவரே பிரசவத்திற்கு உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது .

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை வடபாதி ஊராட்சியைச் சேர்ந்தவர்கள் தினேஷ்குமார் - சிவசங்கரி தம்பதி. சிவசங்கரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் வீட்டிலேயே சுக பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருந்தார். இந்தநிலையில் இன்று காலை 5 மணிக்கு வீட்டிலேயே சுக பிரசவத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பிரசவத்தின் போது அவரது கணவர் தினேஷ்குமார் உடனிருந்து உதவினார்.

பெரும்பாலும் திருமணமான பெண்கள் முதல் பிரசவமான தலைப் பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு செல்வது வழக்கம். ஆனால் சிவசங்கரி வலங்கைமானில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்லாமல் சுகப்பிரசவத்தில் பெற்றுக்கொள்ள விரும்பியதால் தான் விரும்பியபடி கணவர் வீட்டிலேயே குழந்தையை பெற்றெடுத்தார். தாயும் சேயும் பூரண நலமாக உள்ளனர்.

தினேஷ்குமாரின் வீட்டில் ஏற்கெனவே அவரது தங்கையும் வீட்டிலேயே சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றுள்ளார். தினேஷ்குமாரின் சகோதரியான திவ்யா திருமணமாகி பாபநாசத்தில் வசித்து வந்தார். கர்ப்பம் அடைந்த அவர் தலைப் பிரசவத்திற்கு தனது தாய் வீட்டிற்கு வந்திருந்தார். ஒரு மாதத்திற்கு முன் கடந்த மே-17 அன்று அவரும் வீட்டிலேயே சுகப் பிரசவத்தில் ஆண் குழந்தை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

"தங்கை குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கேட்டு பதிவு செய்துள்ள நிலையில், வடபாதி கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் தருவதற்கு காலதாமதம் செய்கிறார். சுகாதாரத்துறையும், காவல்துறையும் தொடர்ந்து அச்சுறுத்தியும் மிரட்டியும் வருகிறது. மருத்துவத் தேர்வு அவரவர் விருப்பம். வீட்டு பிரசவம் அப்பெண்ணின் சுய விருப்பம். இதனில் குறுக்கிடுவது குற்றம் மட்டுமல்ல, சட்டத்திற்கு புறம்பான செயல்" என்று கூறும் தினேஷ்குமார் பிறப்புச் சான்றிதழ் கோரி தொடர்ந்து போராடி வருகிறார்.

x