புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 2014 ஆகஸ்ட் 28-ம் தேதி அன்று தொடங்கி வைத்த பிரதமரின் மக்கள் வங்கித் திட்டம் வெற்றிகரமாக இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. திட்டம் தொடங்கப்பட்டது முதல் இத்திட்டத்தின் கீழ் 53.14 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வங்கிக் கணக்கு தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நிதி உள்ளடக்கம் மற்றும் அதிகாரமளித்தலை அடைவதற்கு முறையான வங்கி சேவைகளுக்கான உலகளாவிய மற்றும் குறைந்த செலவிலான அணுகுமுறை அவசியம். இது ஏழைகளை பொருளாதார ரீதியில் ஒருங்கிணைக்கிறது. விளிம்பு நிலை மக்களின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றுகிறது. வங்கிக் கணக்குகள், சிறு சேமிப்புத் திட்டங்கள், காப்பீடு மற்றும் கடன் உள்ளிட்ட உலகளாவிய, குறைந்த செலவிலான, முறையான நிதி சேவைகளை வழங்குவதன் மூலம், பிரதமரின் மக்கள் வங்கித் திட்டம் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் வங்கி மற்றும் நிதி சூழலை மாற்றியுள்ளது.
மக்கள் வங்கித் திட்டத்தில் கணக்குகள் தொடங்கப்பட்டதன் மூலம் 53 கோடி மக்கள் முறையான வங்கி அமைப்புக்குள் கொண்டு வரப்பட்டதில் இந்த முயற்சியின் வெற்றி பிரதிபலிக்கிறது. இந்த வங்கிக் கணக்குகள் ரூ.2.3 லட்சம் கோடி வைப்பு இருப்பைப் பெற்றுள்ளன. இதன் விளைவாக 36 கோடிக்கும் அதிகமான விலை இல்லா ரூபே அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இது ரூ. 2 லட்சம் விபத்து காப்பீட்டுத் தொகையையும் வழங்குகிறது. குறிப்பாக, கணக்கு தொடங்குவதற்கான கட்டணம் அல்லது பராமரிப்பு கட்டணங்கள் எதுவும் கிடையாது, குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை.
67% கணக்குகள் கிராமப்புற அல்லது சிறு நகர்ப்புற பகுதிகளில் திறக்கப்பட்டுள்ளதும், 55% கணக்குகள் பெண்களால் தொடங்கப்பட்டுள்ளதும் மகிழ்ச்சியளிக்கிறது. மக்கள் வங்கிக் கணக்கில், மொபைல், ஆதார் இணைப்பு ஆகியவை நிதி உள்ளடக்கத்துக்கான மிக முக்கியமான தூண்களாகும். இது அரசின் நலத்திட்டங்களில் தகுதியான பயனாளிகளுக்கு விரைவாக, தடையற்ற, வெளிப்படையான பரிமாற்றத்துக்கு உதவுவதுடன் டிஜிட்டல் பணப் பட்டுவாடாவை ஊக்குவிக்கிறது,” என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த 10 ஆண்டுகளில் பிரதமரின் மக்கள் வங்கித் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதன் மூலம் பல மைல்கற்களை எட்டியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 53.14 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வங்கிக் கணக்கு தொடங்கியுள்ளனர். இந்த கணக்குகளின் கீழ் மொத்த வைப்புத் தொகை 2,31,236 கோடி ரூபாய். 3.6 மடங்கு கணக்குகள் அதிகரித்துள்ளதால் வைப்புத்தொகையும் சுமார் 15 மடங்கு அதிகரித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒரு கணக்குக்கான சராசரி வைப்புத்தொகை - ரூ 4,352 ஆக உள்ளது.
36.14 கோடி ரூபே அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 89.67 லட்சம் விற்பனை முனையங்கள், செல்பேசி மூலமான விற்பனை முனையங்கள் நிறுவப்பட்டிருப்பது, யுபிஐ போன்ற செல்பேசி அடிப்படையிலான பரிவர்த்தனை முறை அறிமுகம் செய்திருப்பது ஆகியவற்றால் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை நிதியாண்டு 2018-19-ல் 2,338 கோடி என்பதிலிருந்து நிதியாண்டு 2023-24-ல் 16,443 கோடியாக அதிகரித்தது. யுபிஐ நிதி பரிவர்த்தனைகளின் மொத்த எண்ணிக்கை 2018-19-ல் 535 கோடி என்பதிலிருந்து நிதியாண்டு 2023-24-ல் 13,113 கோடியாக அதிகரித்தது.
அதேபோல் விற்பனை முனையங்கள் மற்றும் இ-வணிகத்தில் ரூபே அட்டை மூலமான பரிவர்த்தனைகளின் மொத்த எண்ணிக்கை நிதியாண்டு 2017-18-ல் 67 கோடி என்பதிலிருந்து நிதியாண்டு 2023-24-ல் 96.78 கோடியாக அதிகரித்தது.
இத்திட்டம் முத்ரா கடன் திட்டத்தின் கீழ், ஒதுக்கீடு பெறுவதற்கு ஏதுவாக இருப்பதால், இதன் வருடாந்தர விகிதம் நிதியாண்டு 2019-ல் இருந்து நிதியாண்டு 2024 வரையிலான 5 ஆண்டுகளில் 9.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடனுக்கான அணுகலில் மாற்றம் ஏற்பட்டிருப்பதால், இது தனி நபர்கள் தங்களின் வருவாயை அதிகரித்துக்கொள்ள அதிகாரமளிக்கிறது,” என்று அவர் கூறியுள்ளார்.
பிரதமர் வாழ்த்து: இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “இன்று நாம் ஒரு முக்கியமான தருணத்தைக் கொண்டாடுகிறோம் . 10 ஆண்டு கால மக்கள் வங்கித் திட்டத்தின் அனைத்து பயனாளிகளுக்கும் வாழ்த்துக்கள். இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக மாற்ற உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள். நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதிலும், கோடிக்கணக்கான மக்களுக்கு, குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் நலிவடைந்த சமூகங்களுக்கு கண்ணியத்தை வழங்குவதிலும் மக்கள் வங்கித் திட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்” என்று பிரதமர் மோடி பாராட்டி பதிவிட்டுள்ளார்.