புதுடெல்லி: துறை தொடர்பான நாடாளுமன்ற குழுக்கள் (DPSCs) அமைப்பதில் தாமதம் குறித்து கவலை தெரிவித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், மாநிலங்களவையின் அவைமுன்னவர் ஜெ.பி.நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆக.27-ம் தேதியிட்டு எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் கூறியிருப்பதாவது: ஜுலை 9ம் தேதியிட்ட மாநிலங்களவை செயலகத்தின் வேண்டுகோள்படி, மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக, ஜூலை 17ம் தேதிக்கு பல்வேறு கட்சிகள் தங்களின் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவேண்டும். திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஜுலை 12ம் தேதி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தது.
மாநிலங்களவையில் நாம் கூடியபோது நான் வாய்மொழியாக இந்த விவகாரத்தை எழுப்பி இருந்தேன். அதற்கு நீங்களும் மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாக நாடாளுமன்ற குழுக்கள் அமைக்கப்படும் என்று வாய்மொழியாக கூறியிருந்தீர்கள். ஆகஸ்ட் மாதம் முடிய உள்ள நிலையில் இதுவரையிலும் நாடாளுமன்ற குழுக்கள் உருவாக்கப்படவில்லை.
இதுநமது ஜனநாயக நடைமுறை மற்றும் இயற்றப்பட்ட சட்டத்தினை தரத்தினை மிகவும் பாதிப்படையச் செய்கிறது. சமீப ஆண்டுகளில், முழுமையான ஆய்வுக்காக நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மற்றும் தேர்வுக்குழுவுக்கு பரிந்துரைக்கப்படும் மசோதாக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்ட என்னை அனுமதிக்க வேண்டும்.
கடந்த 2014 - 2024 காலக்கட்டத்தில் வெறும் 13 சதவீத மசோதாக்கள் மட்டுமே நாடாளுமன்ற குழுக்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதேபோல் 16 சதவீத மசோதாக்களே 17வது மக்களவை நிலைக்குழுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை நியமன மசோதா 2023, விவசாய மசோதாக்கள், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா 2033 போன்ற சில முறையான ஆய்வுகள் இல்லாமல் நிறைவேற்றப்பட்ட மசோதாகள்.
எம்.பி.களுடன் கலந்தாலோசிக்கவும், அவையில் விவாதிக்கப்படும் விஷயங்களின் நுணுக்கங்களைப் பெறவதற்கான நாடாளுமன்ற அமர்வுகளின் காலம் மிகவும் குறைவே. இந்த நிலையில் முக்கியமான விஷயங்களை விவாதிக்க துறைசார் நாடாளுமன்ற குழுக்கள் அதிக கால அவகாசத்தைத் தருகின்றன. அதனால் அவைகளைத் தொடங்க உறுப்பினர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்த விவகாரத்தின் முக்கியத்துவத்தை பரிசீலிக்கமாறும், நாடாளுமன்ற செயல்முறைகளை உறுதிசெய்யவும் உங்களை நான் வலியுறுத்துகிறேன். உடனடியாக துறைசார் நாடாளுமன்ற குழுக்கள் அமைக்கப்படும் என்று நான் எதிர்நோக்குகிறேன். ஏற்கனவே நிறைய கால விரையம் ஏற்பட்டுவிட்டது". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் 16 துறைசார் நாடாளுமன்ற குழுக்களும், மாநிலங்களவையில் 8 துறைசார் நாடாளுமன்ற குழுக்களும் உள்ளன.