மேற்குவங்க பந்த் | இயல்பு வாழ்க்கை பாதிப்பு: திரிணமூல், பாஜக தொண்டர்களிடையே மோதல்


கொல்கத்தா: மேற்குவங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த மாணவர் பேரணியில் போலீஸார் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாநிலத்தில் 12 மணிநேர பந்த்-க்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இதனால் மேற்குவங்கத்தில் சிறிது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்ளில் திரிணமூல் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கொல்கத்தாவில், வழக்கமான வார நாட்களில் இயங்கும் பேருந்துகள் மற்றும் வானங்களே இயங்குகின்றன. மாநில தலைநகரில் பந்த் காரணமாக கடைகளை அடைக்க முயன்ற பாஜக தொண்டர்களை போலீஸார் கைது செய்தனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பாஜக அழைப்பு விடுத்துள்ள இந்த பந்த்-தை கண்டுகொள்ள வேண்டாம் என்று மேற்குவங்க அரசு மக்களை வலியுறுத்தியுள்ளது. மேற்குவங்க பந்த் கொல்கத்தாவை அதிகமாக பாதிக்கவில்லை என்றாலும் வழக்கமான வார நாட்களை விட குறைவான மக்கள் நடமாட்டமே இருந்தது.

குறைவான அளவிலேயே பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்சிகளே ஓடின. சந்தைகளும், கடைகளும் திறந்திருந்தன. பள்ளி, கல்லூரிகளும் திறந்திருந்தன. பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய கேட்டுக் கொண்டுள்ளது. தெருக்களில் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஷியாம் பஜார் மெட்ரோ ரயில் நிலையத்தின் கதவுகளை வலுக்கட்டாயமாக மூட முயன்ற 7 பாஜக தொண்டர்களை போலீஸார் கைது செய்தனர்.

நாடியா மாவட்டத்தில் பாஜக திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டன. பங்கான் - சீல்தாஹ், கோச்சரன் நிலையம், முர்சிதாபாத் நிலையம் மற்றும் பராக்பூர் நிலையங்களில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. மேற்குவங்கத்தின் வடக்கு பகுதியில், அரசு நடத்தும் வடக்கு வங்கால மாநில போக்குவரத்து கழகத்தின் பேருந்து ஓட்டுனர்கள் தலைகளில் கவசம் அணிந்து பேருந்துகளை இயக்கினர்.

"இன்று பாஜக பந்த்-க்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், நாங்கள் ஹெல்மெட்கள் அணிந்து பேருந்துகளை இயக்குகிறோம். பாதுகாப்புக்காரணங்களுக்காக போக்குவரத்து துறை எங்களுக்கு ஹெல்மெட் அளித்துள்ளது" என்று பேருந்து ஓட்டுநர் தெரிவித்தார்.

பூர்பா மேதினிபூர் மாவட்டத்தின் நந்திகிராமில் பாஜக தொண்டர்கள் சாலைமறியலில் ஈடுபட்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்தனர். பாங்குரா நகர பேருந்து நிலையத்திலும் பாஜக தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். பபானிபூரில், பாஜக எம்எல்ஏ அக்னிமித்ரா பால், வாகனங்களில் வெளியே செல்ல வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தினார். "அவர்கள் அனைவரும் முதுகெலும்பற்றவர்களாகி விட்டனர்.

போலீஸார் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினை மதிக்கவில்லை. அவர்கள் போராட்டக்காரர்கள் மீது ரசாயனம் கலந்த தண்ணீரை பீச்சி அடித்தனர். மாநிலத்தின் பெண்களுக்கு அவர்களால் பாதுகாப்பு அளிக்க முடியவில்லை. ஆனால், பெண்கள் போராடினால் அவர்களை கலைக்க வன்முறையை பிரயோகித்தனர்.

இதனிடையே மேற்கு வங்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அனைத்து அரசு அலுவலகங்களும் திறந்திருக்க வேண்டும், அனைத்து ஊழியர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும், இல்லையென்றால் ஷோ-காஸ் நோட்டீஸை எதிர்கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திரிணமூலின் சத்ர பரிசத் நிறுவனர் தினத்தை, கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவனையில் கொல்லப்பட்ட 31 வயது பயிற்சி பெண் மருத்துவருக்கு அர்ப்பணிக்க முடிவுசெய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பெண் மருத்துவர் கொடூர கொலைக்கு நீதி கேட்டு மேற்கு வங்க தலைமைச் செயலகம் நோக்கி நேற்று (செவ்வாய்க் கிழமை) ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி நடத்தினர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி, தண்ணீரை பீய்ச்சியடித்தனர். கண்ணீர்புகை குண்டுகளும் வீசப்பட்டன. இதனால் கொல்கத்தா, ஹவுரா பகுதிகள் வன்முறை களமாக மாறின. இதில் 100 மாணவர்களும், 15 போலீஸாரும் காயமடைந்தனர். 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

x