பிரச்சாரத்துக்கே செல்லாத பிரதமர் மோடி; ஆட்சிக்கனவில் காங்கிரஸ் - மிசோரம் தேர்தல் நிலவரம்!


மோடி - ராகுல்

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன. மிசோரமில் ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் 21. மிசோரமில் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இன்று மாலை 4 மணியுடன் வாக்குப் பதிவு முடிவடையும். டிசம்பர் 3-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 2018-ம் ஆண்டு மிசோரம் சட்டசபை தேர்தலில் மொத்தம் 81.31% மக்கள் வாக்களித்திருந்தனர்.

மிசோரம் மாநில தேர்தல்

மிசோரம் தேர்தலில் மொத்தம் 174 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 18 பேர் பெண்கள். மிசோரம் தேர்தலுக்காக மொத்தம் 1276 வாக்கு சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் பணியில் சுமார் 6,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மிசோரம் தேர்தலுக்கான பாதுகாப்பு பணியில் 50 கம்பெனிகள் துணை ராணுவப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

மிசோரமில் மொத்தம் 8,51,895 பேர் வாக்காளர்கள். இவர்களில் ஆண்கள்- 4,38,925 (51.3%); பெண்கள்- 4,12,969 (48.7%). லாங் திலாய் மாவட்டம் துய்சிங் தொகுதியில் அதிகபட்சமாக 36,042 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். மிக குறைந்தபட்சமாக லுங்லேய் மாவட்டம் தோரங் தொகுதியில் 14,909 பேர் வாக்களிக்கின்றனர்.

2018-ம் ஆண்டு மிசோரம் சட்டசபை தேர்தலில் மிசோ தேசிய முன்னணி 26 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. ஜோரம் மக்கள் இயக்கம் உள்ளிட்ட சுயேட்சைகள் 8 இடங்களிலும் காங்கிரஸ் 5; பாஜக 1 இடத்திலும் வென்றன.

கருத்து கணிப்புகள்: தற்போதைய தேர்தலில் மிசோ தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளிடையே கடும் மும்முனைப் போட்டி நிலவுகிறது. மிசோரம் தேர்தல் தொடர்பான பெரும்பாலான கருத்து கணிப்புகள், இம்மாநிலத்தில் தொங்கு சட்டசபைதான் அமையும் என தெரிவித்துள்ளன. மிசோ தேசிய முன்னணி + காங்கிரஸ் அல்லது ஜோரம் மக்கள் இயக்கம் + காங்கிரஸ் என கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்பு அதிகம். மிசோரமில் பாஜக ஒரு இடத்திலாவது வெல்ல வேண்டும் என முனைப்பில் இருக்கிறது.

மிசோரம் முதல்வர் ஸோரம்தங்கா

மிசோ தேசிய முன்னணி, மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. ஆனால் மணிப்பூர் வன்முறைகளை மத்திய பாஜக அரசு கட்டுப்படுத்த தவறியதால் மிசோரம் தேர்தலில் பாஜகவிடம் இருந்து மிசோ தேசிய முன்னணி விலகி நிற்கிறது. மணிப்பூரில் பாதிக்கப்பட்ட குக்கி இன மக்களும் மிசோரமின் பூர்வ குடிகளும் தொப்புள் கொடி உறவுகள். இதனால் பாஜக மீது ஆளும் மிசோ தேசிய முன்னணி அதிருப்தியில் இருக்கிறது. மேலும் பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் செய்யவும் மாட்டோம் என முதல்வர் ஜோரம்தங்கா அறிவித்தார். இதனால் பிரதமர் மோடி, மிசோரம் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை.

5 மாநில சட்டசபை தேர்தல்களில் பிரதமர் மோடி பிரசாரம் செய்வதற்கு செல்லாத ஒரே ஒரு மாநிலம் மிசோரம் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இந்த மாநிலத்தில் ராகுல் காந்தி தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இதையும் வாசிக்கலாமே...

HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!

x