டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதை அடுத்து கார்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு மிக அதிக அளவில் அதிகரித்து வருகிறது. காற்றின் தரக்குறியீடு 450 புள்ளிகளுக்கு மேல் பதிவாகி அபாயகரமான நிலையில் உள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயக் கழிவுகளை எரிப்பது, தொழிற்சாலைகளில் வெளியேறும் நச்சுவாயுக்கள், வாகனங்களின் எண்ணிக்கை உயர்வு ஆகியவை காரணமாக காற்றுமாசு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், காற்று மாசைக் குறைப்பது தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் வரும் 13 முதல் 20-ம் தேதி வரை கார்களின் ஒற்றைப்படை பதிவெண்கள், இரட்டைப்படை பதிவெண்கள் என்று பிரித்து கார்கள் இயங்க அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடைசி இலக்க எண் ஒற்றைப்படையாகக் கொண்ட கார்கள் ஒருநாளும், இரட்டைப்படை எண் கொண்ட கார்கள் மற்றொரு நாளும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும்.
மேலும் டெல்லியில் கட்டிடப் பணிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 10,12-ம் வகுப்புகள் தவிர, மற்ற வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதோடு, ஆன்லைனில் வகுப்புகள் நடத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...