ஆர்டிஐ மேலும் கூர்மை பெறுமா? தலைமை தகவல் ஆணையரான முதல் பட்டியலினத்தவரின் பின்னணி!


பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் ஆகியோருடன் ஹீராலால் சமாரியா

தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது சாமானியர்களின் உரிமைக் குரலாக மாறி வருகிறது. நாட்டின் குடிமக்கள் தங்களுக்கான அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தகவல்களை உரிமையோடு அறிந்துகொள்ள ஆர்டிஐ உதவுகிறது. மேலும் அரசு இயந்திரம் முடங்கும்போது அதிகாரிகளின் கடமையை சுட்டிக்காட்டவும் தகவல் அறியும் உரிமைச் சட்டங்கள் பேருதவி செய்கின்றன.

ஹீராலால் சமாரியா

இந்த தகவல் அறியும் உரிமை சட்ட விவகாரங்களில் தலைமை தகவல் ஆணையம் என்பதே உச்ச அதிகாரம் படைத்தது. இதில் 10 ஆணையர்களும் அவர்களுக்கு தலைவராக ஒரு தலைமை தகவல் ஆணையரும் இருப்பார். இத்தகைய தலைமை தகவல் ஆணையர் பதவியில் தற்போது ஹீராலால் சமாரியா பொறுப்பேற்றுள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற எளிய நிகழ்வில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஹீராலாலுக்கு பதவிப் பிரமாணம் செய்வித்தார்.

தகவல் ஆணையர்களில் ஒருவராக பணியாற்றி வந்த ஹீராலால், அவர்களில் அனுபவத்தில் மூத்தவர் என்ற வகையில் புதிய தலைமை தகவல் ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஹீராலால் அடிப்படையில் ஒரு பொறியாளர். சிவில் இஞ்சினியரிங் முடித்து, ஐஏஎஸ் தேறி மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக செயலர் உட்பட பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர். அங்கிருந்து ஓய்வு பெற்றவர் தகவல் ஆணையர்களில் ஒருவராக பின்னர் தேர்வு செய்யப்பட்டார்.

பதவியேற்கும் ஹீராலால் சமாரியா

அரசு நிர்வாகத்தில் மிகவும் அனுபவம் கொண்ட ஹீராலால் தற்போது தலைமை தகவல் ஆணையராக பொறுப்பேற்கும் முதல் பட்டியலினத்தவர் என்ற பெருமை பெற்றிருக்கிறார். இந்த பதவியில் அமருவோர் தங்களது 65 வயது வரை அல்லது அடுத்த 5 ஆண்டுகளுக்கு கடமையாற்றுவார்கள். முன்னதாக சனிக்கிழமை அன்று கூடிய பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக் குழு, தலைமை தகவல் ஆணையராக ஹீராலால் சமாரியாவை தேர்ந்தெடுத்தது. சமாரியாவின் பணி அனுபவம், ஆர்டிஐ மேலும் கூர்மை பெற உதவுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

HBD AMBIKA| ‘முதல் மரியாதை’ மீது அம்பிகாவுக்கு வந்த பொறாமை!

x