‘பாஜக ஆட்சியில் தொழில்நுட்பத் தடங்கல் கூட இந்திக்கு சாதகமாக அமைகிறது’ சு.வெங்கடேசன் சாடல்!


மதுரை எம்.பி., சு.வெங்கடேசன்

சமையல் எரிவாயு முன்பதிவில் தமிழ் மொழி நீக்கப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அப்பிரச்சினை சரி செய்யப்பட்டுள்ளது. இது குறித்தான விவாதத்தை கிளப்பிய மதுரை எம்பி சு.வெங்கடேசன், தொடர் விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார்.

இன்டேன் காஸ் முன்பதிவு செய்யும் ஐவிஆர்எஸ் வசதியில் திடீரென தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. சிலிண்டர் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் மாநில மொழியை தெரிவு செய்துகொள்ளும் வசதி திடீரென நீக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான தகவல் பரவியதில் தமிழகத்தில் கொதிப்பலை எழுந்தது. பலரும் சமூக ஊடகங்களில் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். சிபிஎம் கட்சியின் மதுரை எம்பி சு.வெங்கடேசன் ட்விட்டரில்(எக்ஸ் தளம்) காரமான பதிவை நேற்று வெளியிட்டிருந்தார்.

அதில், “இன்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு சேவையில் தமிழ் நிறுத்தம். இந்தி மட்டுமே இருக்கிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அதிகாரிகளுக்கு அலுவல் மொழி விதிகள் தெரியாதா? விதிகளை மீற உத்தரவிட்டது யார்? உடனடியாக தமிழ் சேவையை உறுதிப்படுத்துங்கள்” என்று குமுறி இருந்தார். இதையொட்டி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு அவர் கடிதமும் எழுதியிருந்தார்.

இவற்றை அடுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உடனடியாக விளக்கம் அளித்தது. அதில், ஏர்டெல் சேவையிலிருந்து ஜியோ சேவைக்கு ஐவிஆர்எஸ் சிஸ்டம் மாற்றப்பட்டதில் எழுந்த சிறு தடங்கல் என்றும், தற்காலிகமாக நேரிட்ட இந்த தொழில்நுட்பத் தடங்கல் விரைவில் சரி செய்யப்பட்டதாகவும்’ விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

ஐவிஆர்எஸ் சிஸ்டத்தில் மீண்டும் தமிழ் இடம்பெற்றதற்கு, பொதுவெளியில் பலரும் திருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தை கவனிக்கத்தக்க வகையில் கேள்வி எழுப்பிய சு.வெங்கடேசன், “சமையல் எரிவாயு முன்பதிவில் இந்தி என்ற தவறு சரிசெய்யப்பட்டு தமிழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக எனது கடிதத்திற்கு பதில் வந்துள்ளது. வருத்தம் தெரிவித்து ஐ ஓ சி அறிக்கை. பாஜக ஆட்சியில் தொழில் நுட்பத் தடங்கல் கூட இந்திக்கு சாதகமாக அமைவது வியப்புதான். இந்தி தடங்கல் நீக்கப்பட்டது மட்டற்ற மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.

x