கர்நாடகாவில் ஜிகா வைரஸ் தொற்று பரவல்… பீதியில் பொதுமக்கள்!


கர்நாடகா மாநிலம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் கொசுக்களால் பரவக்கூடிய ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், கர்நாடகாவில் ஜிகா பாதிப்பு மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது. சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் தலகயலாபெட்டா கிராமத்தில் கொசுக்களில் ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

68 இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 100 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில், சிக்கபல்லாபுராவில் உள்ள எடுக்கப்பட்ட ஆறு மாதிரிகளில் ஒன்றில் மட்டும் பாசிட்டிவ் என வந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, வெங்கடாபுரா, திப்புரஹள்ளி, பச்சனஹள்ளி, வட்டஹள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். அங்குள்ள 5,000 பேரின் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ஜிகா வைரஸ் என்பது கொசுக்களால் பரவும் தொற்று. காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, கண்கள் சிவப்பாக மாறுதல், தசைவலி ஆகியவை இதன் அறிகுறிகள். திடீரென பரவும் ஜிகா வைரஸ் தொற்றால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

அதே நேரத்தில், தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க கர்நாடக சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்றும், உடல்நிலை பாதிக்கப்பட்டால் அரசு மருத்துவமனையை அணுகுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

x