மும்பை நகரின் அடையாளம்... முடிவுக்கு வந்தது 60 ஆண்டு பயணம்... சேவையிலிருந்து விலகியது பிரிமியர் பத்மினி!


மும்பையில் கடைசியாக சேவையை நிறுத்திய பிரிமியர் பத்மினி கார்

மும்பையில் 60 ஆண்டுகளாக இயங்கிவந்த பிரிமியர் பத்மினி டாக்ஸி தனது பயணத்தை நேற்றுடன் முடித்துக் கொண்டுள்ளது.

மும்பையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக 20 ஆண்டுகள் பழமையான டாக்ஸிகள் சேவையிலிருந்து பயணிகள் சேவையிலிருந்து அப்புறப்படுத்தப்படுவது வழக்கம். அதன்படி கொஞ்சம் கொஞ்சமாக இந்த சேவையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வந்த நிலையில் பிரிமியர் பத்மினியின் கடைசி டாக்ஸி நேற்றுடன் தன் பயணத்தை முடித்துக் கொண்டது.

பிரிமியர் கார் கம்பெனி கடந்த 1964ம் ஆண்டு பத்மினி டாக்ஸிகளை மும்பை நகரில் அறிமுகம் செய்தது. 2000ம் ஆண்டு வரை 100 சதவீதம் பிரிமியர் பத்மினி டாக்ஸிகள் மட்டுமே அங்கு இயக்கப்பட்டு வந்தன. ஆனால் அதன் பிறகு பிரிமியர் கார் கம்பெனி தொழிலாளர் பிரச்சினையால் மூடப்பட்டது.

பத்மினி கார் தயாரிப்பு நிறுத்தப்பட்டவுடன், அதற்கு மாற்றாக வேறு கம்பெனிகளின் கார்கள் டாக்ஸிகளாக மும்பையில் பதிவு செய்யப்பட்டன. இதனால் மாருதி போன்ற மற்ற கார்கள் டாக்ஸிகள் வரிசையில் அதிக அளவில் இடம்பிடிக்க ஆரம்பித்தன.

டாக்ஸிகளின் ஆயுட்காலம் 20 ஆண்டுகள் மட்டுமே என்று மாநில அரசு கெடு விதித்ததால் மொத்தமாக பிரிமியர் பத்மினி டாக்ஸிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைய ஆரம்பித்தது. இதனால் 2003ம் ஆண்டுதான் கடைசியாக பிரிமியர் பத்மினி கார் ஒன்று பதிவு செய்யப்பட்டது. அந்த கார்தான் தற்போது தன் பயணத்தை முடித்துக் கொண்டிருக்கிறது.

இந்தக் கடைசி பிரிமியர் பத்மினி காரை 2003ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி அப்துல் கரீம் என்பவர் பதிவு செய்தார். இந்த காருக்கும் தற்போது 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால் நேற்றோடு இந்த பிரிமியர் பத்மினி பிராண்ட் கார் தன் 60 ஆண்டுக்கால மும்பை சேவையை முடித்துக்கொண்டுள்ளது.

x