நம்பிக்கை வாக்கெடுப்பு அச்சம்... மோடியை இன்று சந்திக்கிறார் நிதிஷ் குமார்!


நிதிஷ் குமார், பிரதமர் மோடி

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்திக்கவுள்ளார் என்று மூத்த ஜேடியு தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ), இணைவதற்காக கடந்த ஜனவரி 28-ம் தேதி, ஐக்கிய ஜனதா தள தலைவரும், அம்மாநில முதல்வருமான நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியை முறித்தார்.

முதல்வராக மீண்டும் பதவியேற்ற நிதீஷ்குமார்

அன்றைய தினமே பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்றார். என்டிஏ கூட்டணியில் இணைந்த பிறகு முதல் முறையாக முதல்வர் நிதிஷ் குமார் இன்று டெல்லிக்கு வரவுள்ளார். இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறிய பின்னர் அவர் முதல் முறையாக இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

வரும் 12-ம் தேதி, பீகார் சட்டமன்றத்தில் நிதிஷ் குமார் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள உள்ள நிலையில், 5 நாட்களுக்கு முன்னதாக பிரதமரை சந்திக்கிறார் நிதிஷ்.

பிரதமருடனான சந்திப்பை தொடர்ந்து டெல்லியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரையும் நிதிஷ் குமார் சந்திப்பார் எனச் சொல்லப்படுகிறது.

ஜே.பி.நட்டா, அமித் ஷா

பாஜகவைச் சேர்ந்த பீகார் துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோர் கடந்த திங்கள்கிழமை பிரதமர் மோடியைச் சந்தித்தனர். இந்த நிலையில் பாஜக தலைவர்களை இன்று நிதிஷ் குமார் சந்திக்கும் போது, பீகாரில் மாநிலங்களவை தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பீகாரில் 6 மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது.

ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த பஷிஷ்த் நாராயண் சிங், அனீல் ஹெக்டே, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மனோஜ் குமார் ஜா, மிசா பாரதி, பாஜகவின் சுஷில் குமார் மோடி, காங்கிரஸ் கட்சியின் பீகார் மாநிலத் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் ஆகியோரின் பதவிக் காலங்கள் முடிவுக்கு வருவதால் இந்த 6 இடங்களுக்கும் தேர்தல் நடப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

வாக்காளர் பட்டியலில் இருந்து 1.66 கோடி பேர் நீக்கம்... உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

சட்லஜ் ஆற்றில் மீட்கப்பட்டது வெற்றி துரைசாமியின் உடல் பாகமா?: டிஎன்ஏ பரிசோதனை!

x