​​​​​​​பொது வாழ்க்கையில் இருந்து மோடி விலக வேண்டும்: கார்கே வலியுறுத்தல்


இந்து - முஸ்லிம் குறித்து பிரதமர் தினமும் வெறுப்பு பேச்சு மோடி விலக வேண்டும் பொது வாழ்க்கையிலிருந்துகாங்கிரஸ் தலைவர் கார்கே வலியுறுத்தல்இந்து-முஸ்லிம் குறித்து தினமும் வெறுப்புப் பேச்சை பேசி வருவதால் பிரதமர் நரேந்திர மோடி பொது வாழ்க்கையிலிருந்து விலக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: தேர்தல் பிரச்சாரங்களின் போது தினமும் இந்து-முஸ்லிம் குறித்து வெறுக்கத்தக்க பேச்சுகளை பிரதமர் நரேந்திர மோடி கூறி வருகிறார். அவரது நோக்கம் தூய்மையானதாக இல்லை.

எருமை மாடுகளை அப்புறப்படுத்துவது, முஸ்லிம்களுக்கு பட்ஜெட்டில் 15 சதவீதம் ஒதுக்குவது போன்ற விஷயங்களை தொடர்ந்து அவர் கூறி வருவதன் மூலம் சமூகத்தில் பிளவை உண்டாக்குகிறார். தனது சர்ச்சை பேச்சுகளுக்கு இதுவரை ஒரு வருத்தம் கூட தெரிவிக்க மனமில்லாத பிரதமர் மேடி பொது வாழ்க்கையை விட்டு வெளியேற வேண்டும்.

ஒரு நாட்டின் பிரதமர் என்பவர் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டும். ஆனால், வாக்குகளை பிரிப்பதற்காக தேர்தல் பிரச்சாரங்களில் அவர் தொடர்ந்து வெறுப்புப் பேச்சுகளை பேசி வருகிறார். சிறுபான்மையினர், பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றங்களை மோடி ஒரு முறையாவது கண்டித்திருக்கிறாரா?

வெறுப்பு மற்றும் பழிவாங்கும் அரசியலை பரப்புவது பாஜகதான். காங்கிரஸில் உள்ள நாங்கள் அனைவரையும் உள்ளடக்கி அழைத்து செல்கிற அன்பின் கடையை விரித்துள்ளோம். ஏழைகளுக்கு ஏதாவது கொடுப்பது அல்லது ஏழைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது, முஸ்லிம்களுக்கு சிறப்புப் பள்ளிகள் மூலம் கல்வி அளிப்பது போன்றவை திருப்திப்படுத்தும் அரசியல் என்று கூற முடியாது.காங்கிரஸ் கட்சி எந்த ஒரு தனிநபருக்கோ அல்லது மோடிக்கோ எதிரானது அல்ல. பிரதமர் மோடி பின்பற்றும் சித்தாந்தத்திற்கு மட்டுமே எதிரானது. இவ்வாறு கார்கே தெரிவித்தார்.