என் மகனைக் கண்டுபிடித்து தந்தால் 1,00,00,000 ரூபாய் பரிசு... சைதை துரைசாமி அறிவிப்பால் பரபரப்பு!


பரிசு அறிவிப்பு

இமாச்சலப் பிரதேசத்தில் கார் விபத்தில் காணாமல் போன தனது மகன் வெற்றியைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என சைதை துரைசாமி அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகன் வெற்றியுடன் சைதை துரைசாமி.

சென்னை சைதாப்பேட்டை சிஐடி நகர் பகுதியில் வசித்து வருபவர் முன்னாள் மேயர் சைதை துரைசாமி. இவருக்கு வெற்றி துரைசாமி என்ற மகன் உள்ளார். வெற்றி துரைசாமி திருமணம் முடிந்து தனது மனைவி மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளுடன் தாம்பரத்தில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வந்தார்.

சினிமா தயாரிப்பாளரான வெற்றி துரைசாமி, திரில்லர் படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அப்படத்திற்கு லொகேஷன் பார்ப்பதற்காக தனது நண்பர்களுடன் இமாச்சலப் பிரதேசத்திற்கு அவர் சென்றார்.

வெற்றி துரைசாமி

இந்நிலையில் கடந்த 4-ம் தேதி மதியம் வாடகை கார் ஒன்றை எடுத்துக் கொண்டு வெற்றி துரைசாமி மற்றும் அவரது உதவியாளர் கோபிநாத் ஆகிய இருவரும் இமாச்சலப் பிரதேசம் கஷாங் நாலா மலைப்பகுதிக்குச் சென்று கொண்டிருந்தனர். அங்கு மலை மீது சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள பள்ளத்தில் உருண்டு சட்லஜ் நதியில் விழுந்து மூழ்கியதாக கூறப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகள் அளித்த தகவலின் பெயரில் இமாச்சலப் பிரதேச போலீஸார், சம்பவ இடத்திற்கு வந்து கார் ஓட்டுநர் தஞ்சின் உடலை சடலமாக மீட்ட நிலையில் வெற்றி துரைசாமியின் உதவியாளரான திருப்பூர் மாவட்டம் வெள்ளகோயில் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவரை படுகாயங்களுடன் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் கோபி மேல் சிகிச்சைக்காக சிம்லாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் விபத்தில் மாயமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை தேடும் பணியில் 50-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சைதை துரைசாமி.

24 மணி நேரத்திற்கும் மேலாக படகு மூலமாக தேடி வந்த நிலையில் இதுவரை மாயமான வெற்றியை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து சைதை துரைசாமி தனது நண்பர்களுடன் இமாச்சலப் பிரதேசத்திற்கு விரைந்துள்ளார்.

மேலும் இந்த விபத்து தொடர்பாக இமாச்சலப் பிரதேச போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கார் ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தது விபத்துக்குள்ளானதும் தெரிய வந்துள்ளது . அதுமட்டுமின்றி கடந்த 24 மணி நேரத்திற்கு மேலாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் தேடி வரும் நிலையில், பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் தேடும் பணி தற்போது நிறுத்தப்பட்டு மீண்டும் நாளை காலையில் தொடரும் என கின்னனூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இவ்விபத்து குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பவத்தன்று வெற்றி துரைசாமி காரின் பின் இருக்கையிலும் உதவியாளர் முன் இருக்கையிலும் அமர்ந்து சென்றுள்ளார். மேலும் 3 பேரும் அப்பகுதியில் உள்ள சோதனைச் சாவடியை கடந்து சென்றதும் தெரியவந்தது.

அப்போது உதவியாளர் மற்றும் ஒட்டுநர் சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் விபத்தின் போது அவர்கள் காருடன் நதியில் விழுந்ததும் வெற்றி துரைசாமி பின் இருக்கையில் அமர்ந்து சென்றதால் விபத்து ஏற்பட்டு கார் பள்ளத்தில் உருண்டு விழுந்த போது கார் கதவு திறந்தால் வெற்றி தூக்கி வீசப்பட்ட நிலையில் விழுந்தது தெரியவந்தது. இதனால் அவர் எங்கு விழுந்தார், என்பதை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் காணாமல் போன வெற்றி துரைசாமியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 1 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என சைதை துரைசாமி அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இமாசலப் பிரதேச ஆட்சியர் மூலம் இது குறித்து வாய்மொழி உத்தர வழங்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கும் இதுகுறித்து அறிவித்துள்ளதாகவும் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக வெற்றி துரைசாமியை தேடும் பணியில் துணை ராணுவப் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

x