‘மை பாரத்’ என்ற பெயரில் நாட்டின் இளைஞர்கள் வளர்ச்சிக்கு அடித்தளமிடக்கூடிய டிஜிட்டல் தளம் ஒன்றை மத்திய அரசு நாளை(அக்.31) தொடங்கவுள்ளது.
சுதந்திர தேசத்தை முழுமையாக கட்டமைத்ததில் இளைஞர்களுக்கு இன்றும் உத்வேகமளிக்கும் ’இந்தியாவின் இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் நாளை(அக்டோபர் 31) வருகிறது. இதனை முன்னிட்டு தேசத்திலுள்ள இளைஞர்களின் வளர்ச்சிக்கு அடித்தளமிடும் டிஜிட்டல் தளம் ஒன்று மத்திய அரசால் தொடங்கப்பட உள்ளது.
இந்தியில் ‘மேரா யுவ பாரத்’ என்றும் ஆங்கிலத்தில் ’மை பாரத்’(MY Bharat) என்றும் இந்த தளம் பெயரிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தனது மாதாந்திர 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சி மூலம் இதனை பெருமிதத்துடன் அறிவித்தார். ஆர்வம், கனவுகள் மற்றும் தங்கள் திறமைகள் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடும் இளைஞர்களுக்கு புதிய தளம் அடித்தளமிடும் என்று அப்போது அவர் கூறினார்.
"இது ’விக்சித் பாரத்’ எனப்படும் வளர்ந்த இந்தியாவை கட்டமைப்பதில் நாட்டின் இளைஞர் சக்தியை ஒருங்கிணைக்கும் ஒரு தனித்துவமான முயற்சியாகும்" என்று பிரதமர் மோடி பெருமிதமாக தெரிவித்தார். MyBharat.gov.in என்ற இந்த இணையதளத்தில் தங்களை பதிவு செய்துகொள்ளுமாறு இளைஞர்களை அவர் அறிவுறுத்தினார். மேலும் அந்த தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களில் பயன்பெறவும் இளைஞர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
இவை தவிர்த்தும் எதிர்வரும் பண்டிகை காலத்தின் கொண்டாட்டங்களுக்கு, கைவினைஞர்கள் மற்றும் ஏழை மக்கள் தயாரித்த உள்ளூர் பொருட்களை அதிகளவில் வாங்குமாறு இளைஞர்களை பிரதமர் கேட்டுக்கொண்டார். பண்டிகை தருணம் என்றில்லாது, பயணம், சுற்றுலா என செல்லும்போதும், உள்ளூர் தயாரிப்புகளை வாங்குவதன் மூலம் 'மேக் இன் இந்தியா' முன்னெடுப்புக்கு இளைஞர்களால் பங்களிக்க முடியும் என்றார். மேலும் தங்கள் பணப் பரிவர்த்தனைகளை, நாட்டின் பெருமைமிகு இன்னொரு அடையாளமான, ’யுபிஐ’ மூலம் மேற்கொள்ளுமாறும் அவர் அப்போது கேட்டுக்கொண்டார்.