துரோகம் செய்யும் காங்கிரஸுடன் யார்தான் நிற்பார்கள்? - அகிலேஷ் ஆவேசம்!


அகிலேஷ் \

காங்கிரஸார் துரோகம் செய்வார்கள் என்று தெரிந்திருந்தால் அவர்களை நம்பியிருக்க மாட்டேன். காங்கிரஸ் இவ்வாறு நடந்துகொண்டால், அவர்களுடன் யார் நிற்பார்கள் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்திருக்கிறார்.

அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலைக் கருத்தில்கொண்டு, பா.ஜ.க-வை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ், தி.மு.க, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உட்பட 28 எதிர்க்கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைந்து `இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்திருக்கின்றன.

இவ்வாறிருக்கவே, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரசாரத்தை நடத்தத் தொடங்கிவிட்டது. ராஜஸ்தானில் மட்டும் இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை காங்கிரஸ். காங்கிரஸைப்போலவே, இந்தியா கூட்டணியிலிருக்கும் ஆம் ஆத்மி, சமாஜ்வாதி போன்ற கட்சிகள் மத்தியப் பிரதேசத்தில் தனது வேட்பாளர் வெளியிட்டிருக்கின்றன. இதில், சமஜ்வாதி சில தொகுதிகளில் காங்கிரஸுக்கு எதிராகவே வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது.

இவ்வாறான சூழலில், நேற்று முன்தினம் மத்தியப் பிரதேச தேர்தலில் தனது இரண்டாவது வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி வெளியிட்டிருக்கும் நிலையில்,

மத்தியப் பிரதேச தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், ``எங்களுக்கு ஆறு இடங்கள் ஒதுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி இல்லை என்று எங்களுக்குத் தெரிந்திருந்தால், காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்த எங்கள் தலைவர்களை நாங்கள் அனுப்பியிருக்க மாட்டோம். காங்கிரஸிலிருக்கும் சிலர் பா.ஜ.க-வுடன் தொடர்பிலிருக்கின்றனர்.

மாநில அளவில் கூட்டணி இல்லை என்று தெரிந்திருந்தால், சமாஜ்வாதி தலைவர்களை திக்விஜய சிங்கிடம் அனுப்பியிருக்க மாட்டேன். அதோடு, காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் துரோகம் செய்வார்கள் என்று தெரிந்திருந்தால் அவர்களை நம்பியிருக்கவும் மாட்டேன் " என்றார்.

அதுமட்டுமல்லாமல் இன்றும் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், ``சீட் கொடுக்க விருப்பமில்லையென்றால் அதனை முன்பே சொல்லியிருக்க வேண்டும். இந்தியா கூட்டணி என்பது தேசிய அளவிலான தேர்தலுக்கு என்று இப்போது எனக்குத் தெரிந்துவிட்டது. காங்கிரஸ் தொடர்ந்து இவ்வாறு நடந்துகொண்டால், அவர்களுடன் யார் நிற்பார்கள்... மனதில் குழப்பத்துடன் பா.ஜ.க-வுக்கு எதிராகப் போராடினால் நாங்கள் வெற்றி பெற மாட்டோம்" என்று கூறினார்.

230 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17-ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்பதும், டிசம்பர் 3 அன்று மொத்தமாக ஐந்து மாநில முடிவுகளும் ஒன்றாக வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் பரபரப்பு... பாஜக அலுவலகத்தைச் சூறையாடிய பிரபல ரவுடி!

செம மாஸ்... நடுரோட்டில் தெறிக்க விட்ட ரஜினி... வைரலாகும் வீடியோ!

x