வங்கி புரொபேஷனரி அதிகாரி (Probationary Officer) பணிக்காக நடத்தப்பட்ட ஐபிபிஎஸ் முதல்நிலைத் தேர்வின் முடிவுகள் வெளியாகி உள்ளன.
ஐபிபிஎஸ் என்று அழைக்கப்படும் வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (Institute of Banking Personnel Selection) மூலம் நாடு முழுவதும் வங்கிகளுக்கு ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த நிலையில் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட பல்வேறு பொதுத் துறை வங்கிகளில் காலியாக உள்ள புரொபேஷனரி அதிகாரிகள்/ மேனேஜ்மென்ட் பயிற்சியாளர்கள் (Probationary Officer/ Management Trainee posts) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (Institute of Banking Personnel Selection) வெளியிட்டது.
இந்தப் பொது வேலைவாய்ப்பில் பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்திய வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேசனல் வங்கி, பஞ்சாப் மற்றும் சிந் வங்கி, யு.சி,ஓ. வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் இந்த பொது நுழைவுத் தேர்வில் பங்கேற்றன. இதற்கு தகுதியான நபர்கள் முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து முதல்நிலை தேர்வு செப்டம்பர் 23 -30 மற்றும் அக்டோபர் 01 வரையில் நடைபெற்றது. இந்த நிலையில், தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. https://ibps.in என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வின் மூலம் 3049 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மெயின் தேர்வு நவம்பர் 5ம் தேதி நடைபெறுகிறது.